
சோழர் பரம்பரையில் மனுநீதிச் சோழனுக்கு பிறகு ஆண்ட மன்னர்களில் ஒருவர் சோழ மன்னர் குளக்கோட்டன். இவரின் இயற்பெயர் சோழகங்க தேவன் என்று அறியப்படுகிறது. இவர் சோழநாட்டை ஆண்ட காலம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லை. ஆயினும் இவர், மன்னர் மனுநீதிச் சோழனுக்கும், மன்னர் இளம்சேட்சென்னிகும் இடைப்பட்ட காலத்தில் சோழ மன்னனாக ஆட்சி புரிந்திருக்கிறார் என்பது திண்ணம்.
சோழநாட்டையும், மதுரையையும் ஆண்டுவந்த சோழ மன்னர் வீரராமதேவரின் மகன் குளக்கோட்டன். சோழ மன்னர் வீர ராமதேவரின் பற்றிய வேறு எந்தக் குறிப்புகளும் இதுவரையில் சரித்திர ஆராச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை. அனுராதபுரத்தை பாண்டு என்ற மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்தில், அனுராதபுரதிற்கு பயணம் மேற்கொண்டார் மன்னர் வீரராமதேவர்.
சோழ மன்னர் மனுநீதிச் சோழன் ( எல்லாளன் / எலாரா ) ஆட்சி காலத்தில், இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சர ஆலயம் ஆயிரம் கால் மண்டபத்துடன் புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கோவில் தற்போது தென்கயிலாயம் என்று புகழ் பெற்று விளங்குகிறது. இக்கோவில் அனுராதபுரத்தின் ஆண்ட புத்த மதத்தைச் சார்ந்த மன்னரான மாஹாவம்ச என்ற சிங்கள மன்னனால் நிர்முலமாக்கப்பட்டது.

சிதிலமடைந்து கிடந்த, தம் முன்னோரால் கட்டப்பட்ட கோவிலைக் கண்ட மன்னர் வீரராமதேவர், கோவிலைப் புதுப்பிக்கும் பணியை துவக்கினார். ஆனால் இந்தப் பணியானது அவரது மகனான மன்னர் குளக்கோட்டன் காலத்திலேயே முழுமையடைந்தது. ‘பெரியவளமை பத்ததி’ என்ற செப்பேட்டில் இந்த ஆலயம் குறித்த தகவல்களும், மன்னர் குளக்கோட்டன் செய்த திருப்பணிகள் குறித்தும், அதன் நிர்வாக முறைகளும் பதிவு செய்யப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இது தவிர திருக்கோணேச்சரக் கோவில் கல்வெட்டுகளின் வாயிலாகவும் மன்னர் குளக்கோட்டன் கோவிலைப் புனரமைத்தது பற்றிய விவரங்களை நாம் பெறலாம்.

மன்னர் குளக்கோட்டன் இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்துவந்தார். திருகோணமலையில் உள்ள கந்தளாய் குளம் மன்னர் குளக்கோட்டனால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற முன்னேசுவரம் கோவிலிற்கும் மன்னர் குளக்கோட்டன் திருப்பணிகள் செய்துள்ளார். மேலும் பல கோவில்கள் மன்னர் குளக்கோட்டன் ஆட்சி காலத்தில் புனரமைக்கப்பட்டன. மன்னர் குளக்கோட்டனால் கட்டப்பட்ட கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாயத்திற்கு பெரிதும் உதவி புரிகின்றது.
மன்னர் குளக்கோட்டனின் மனைவி பெயர் ஆடக சவுந்தரி ஆகும். இவை தவிர மன்னர் குளக்கோட்டன் பற்றிய வேறு எந்த தகவல்களும் இதுவரை சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.
Comments