தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றும் மிகவும் பிரசித்திபெற்றதுமான கோயில் காஞ்சிமா நகரில் அமைத்துள்ள ஏகாம்பரநாதர் திருக்கோயில். ஏகாம்பரநாதர் கோயில் சமய நூல்களில் திருக்கச்சியேகம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகாமையில் உள்ள காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர் பெயர் ஏகாம்பரேஸ்வரர் அல்லது ஏகாம்பரநாதர் அல்லது திருவேகம்பர் என்று அறியபடுகிறது. தாயார் பெயர் காமாட்சி அல்லது ஏலவார்குழலி ஆகும்.
இக்கோயில் பஞ்சபூதங்களில் ஒன்றான நிலதிற்குறிய சிவஸ்தலம். இங்குள்ள லிங்கம் பிருத்வி லிங்கம் ஆகும். இந்த சிவஸ்தலதின் ஸ்தலவிருட்சம் மாமரம் ஆகும். இந்த ஸ்தலமானது முத்தி தரும் ஸ்தலங்களில் முதன்மையானது. கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகக் காட்சி அளிக்கிறார்.

கைலாயத்தில் சிவனின் கண்களை பார்வதி தேவி மூட, சூரியன் உதிக்கவில்லை கிரகங்கள் இயங்கவில்லை. உலகத்தின் இயக்கம் முற்றிலும் நின்றது. தன் தவறை உணர்ந்த பார்வதி தேவி சிவனிடம் மன்னிப்பு வேண்டினாள். சசிவபெருமான் தவறுக்குத் தண்டனையாக பார்வதிதேவி பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறுகிறார். பார்வதி தேவி சிவபெருமானை குறித்து தவம் செய்ய ஏற்ற இடம் கேட்க, சிவபெருமான் இந்த ஸ்தலத்தை தேவிக்கு கூறுகிறார்.

பூலோகத்தில் பார்வதி தேவி ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கம் செய்து வைத்துத் தவம் செய்து வந்தாள். பார்வதி தேவியை சோதிக்க எண்ணிய சசிவபெருமான் கங்கையை பூமியில் ஓட விட்டார். மணலால் ஆன லிங்கத்தைக் காக்கும் பொருட்டு பார்வதி தேவி மார்புடன் அணைத்து லிங்கத்தை காக்கிறார். பார்வதி தேவியின் பக்தியில் மகிழ்ந்த சசிவபெருமான், பாவத்தை மன்னித்தருளி பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ளுகிறார். அம்பாள் அணைத்ததால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. பார்வதி தேவியின் தழுவலினால் ஏற்பட்ட தடம் இன்றளவும் லிங்கத்தின் மேல் உள்ளது.
பார்வை இழந்த நிலையில் சிவஸ்தல யாத்திரை மேற்கொண்ட சுந்தரருக்கு இந்த ஸ்தலத்தில் இடது கண் மட்டும் தெரியும்படி சிவபெருமான் அருள் பாலித்தார். அதனால கண் சம்பத்தப்பட்ட நோய்கள் இந்த ஸ்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட விலகும் என்பது ஐதீகம். ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கண்ணாடி அறையில் 5008 ருத்திராட்சங்களால் வேயப்பட்ட பந்தலின் கீழ் அமர்ந்திருக்கிறார். ஸ்ரீராமர் பிரம்மஹத்தி தோஷம் போக வேண்டி வழிபட்ட சஹஸ்ரலிங்கமும் இந்த ஸ்தலத்தில் உள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியார் இந்த ஸ்தலத்தில்தான் கந்த புராணத்தை இயற்றினார்.

இந்த ஸ்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஸ்தலங்களில் இது முதலாவது ஆகும். பெரிய புராணம் போன்ற இலக்கியங்களிலும் இக்கோயில் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்று உள்ளது.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்க நாயனார் ஆகியோரின் அவதாரத்தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்தியடைந்த ஸ்தலம் இது ஆகும்.
மிகவும் பழமையான இந்தக்கோயில் பற்றி மணிமேகலை, பெரும்பாணாற்றுப்படை போன்ற சங்ககால இலக்கியங்களில் குறிப்புக்கள் உள்ளன. அதனால இக்கோயில் குறைந்தது 2300 ஆண்டுகள் முன் கட்டப்பட்ட தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக இருக்க வேண்டுமென்று தெரிகிறது . பல்லவர்களால் முதலில் கட்டப்பட்ட இந்தக்கோயில் பின்னர் சோழர் காலத்தில் மேம்படுத்தப்பட்டது.
ஆதி சங்கரர் கிபி 10ம் நூற்றாண்டில் இக்கோயில், காமாட்சி அம்மன் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றை விரிவுபடுத்திக் கட்டினார் . நாயக்க மன்னர்களும் இந்த கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக கல்வெட்டுகள் குறிப்புக்கள் உள்ளது.
இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இக்கோயிலில் விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளது. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.
இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் புதுப்பிக்கப்பட்டது. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்களான வராகமும் கட்கமும் இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது. சிவஸ்தலங்களில் ஒன்றான இந்த திருக்கோயில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய கோயில்களில் ஒன்று.