குமரிக்கண்டம் – Lemuria

குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா என்று அழைக்கப்படும் நிலப்பகுதி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் ஒரு மாபெரும் நிலப்பகுதியாகும். குமரிக்கண்டம், குமரி நாடு என்ற வேறு வேறு பெயர்களினாலும் இந்த நிலப்பகுதி அழைக்கப்படுகிறது. இந்தக் குமரிக்கண்டமானது கடற்கோளால் கடலில் முழ்கி விட்டதாகக் கருதப்படுகிறது. குமரிக்கண்டம் பண்டைய தமிழர் நாகரிகத்துடன் முக்கியமாக பாண்டியர்களுடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் கருதப்படுகிறது. தற்போதைய இந்தியா, ஆபிரிக்கா, ஆத்திரேலியா, மற்றும் மடகாஸ்கர் நாடுகளை இணைத்து குமரிக்கண்டம் இருந்திருக்கலாம் என்று அறிவியலாளர்களால் கருதப்படுகிறது. இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மடகாஸ்கர் நாடுகளிடையே காணப்படும் புவியியல் மற்றும் இன்னபிற ஒற்றுமைகள் இந்த கருத்திற்கு துணைநிற்கின்றது. பின்னாளில் கண்டறியப்பட்ட புவித்தட்டுகள் சீரமைப்புக் கோட்பாட்டால் இந்த குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டம் கோட்பாடு மறுக்கப்பட்டது. இருப்பினும் இந்த கோட்பாடானது இன்றளவும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே அறிவியலாளர்கள் இடையில் நிலவுகிறது.

மேலும் பாண்டிய நாட்டில் நிலவும் புராணக் கதைகள் இந்த கோட்பாட்டிற்கு வலு சேர்க்கின்றது. தமிழ் மொழி இலக்கிய அறிஞர்கள் கருத்துப்படி குமரிக்கண்டம் எனும் இலெமூரியா கண்டம் பாண்டிய மன்னர்களினால் ஆளப்பட்டது. மேலும் குமரிக்கண்டம் தமிழர்கள், தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரத்தின் பழங்காலத்தை நிரூபிக்க உதவுவதோடு தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என்றும் கூறுகின்றனர். தமிழ் மொழி இலக்கிய அறிஞர்கள் கருத்துப்படி குமரிகண்டதை ஆட்சிசெய்த பாண்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ் இலக்கிய கல்வியாளர்கள் உருவாக்கிய இரண்டு சங்கங்கள் இங்கு இருந்ததாக கருதப்படுகிறது.

குமரிக்கண்டம் கடற்கோளால் மூழ்கியது என தொன்மையான தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில், கண்டம் போன்ற பெரும் நிலப்பரப்பு குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததென கருதும் வகையில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் தொன்மையான தமிழ் இலக்கியங்களில் கடற்கோளால் மூழ்கிய நகரங்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

தேவநேயப் பாவாணர் குமரிக்கண்டத்தில்தான் முதன்முதலில் மனிதர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். மேலும் சமகால இலக்கியமான இறையனார் அகப்பொருளில் பாண்டியப் பேரரசு கடல்கோளால் அழிந்தது பற்றிய விளக்கமான குறிப்புகளை காணமுடிகிறது. இறையனார் அகப்பொருள் உரையில் விளக்கமாக குமரிக்கண்டதை ஆண்ட பாண்டிய அரசர்களின் பெயர்கள் மற்றும் தமிழ் அவையில் இருந்த புலவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புலவர் நக்கீரரால் கூறப்பட்டிருக்கும் இந்தக் தகவல்கள் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணக்கிடப்படுகிறது. இதில் தமிழ் மன்னர்களாகிய பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைச்சங்கம்

குமரிக்கண்டத்தின் தலைநகராக விளங்கிய தென் மதுரையில் கி.மு. 7000 ஆண்டுகளுக்கு முன்னர் தலைச்சங்கம் எனப்படும் முதல் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது என்றும் அகத்தியர் உள்ளிட்ட 549 புலவர்கள் தமிழை ஆராய்ந்தனர் என்றும் தெரிகிறது. சிவன், முருகன் ஆகிய கடவுள்களின் தலைமையில் முதல் தமிழ்ச்சங்கம் செயல்பட்டது என்றும் அதில் குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் குபேரன் முதல் தமிழ்ச்சங்கத்தில் இருந்தார் என்றும் தெரிகிறது. தலைச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. அகத்தியர் எழுதிய அகத்தியம் எனும் நூல் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து. கி.மு. 2387 ஏற்பட்ட முதல் கடற்கோளால் பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முழுவதும் அழிவுற்றன.

இடைச்சங்கம்

கபாடபுரம் என்ற தலைநகரம் இருந்த இடத்தில் இடைச்சங்கம் எனப்படும் இரண்டாம் தமிழ்சங்கம் கி.மு. 2387 முதல் கி.மு. 306 ஆண்டுகள் வரையில் சுமார் 2000 ஆண்டுகள் செயல்பட்டதாகத் தெரிகிறது. கபாடபுரதில் 59 தமிழ் மொழிப் புலவர்கள் அங்கிருந்தபடி தமிழ் மொழிப்பணி ஆற்றியதாகவும் இறையனார் அகப்பொருள் கூறுகிறது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது.

கடைச்சங்கம்

மூன்றாவது தமிழ் சங்கமான கடைச்சங்கம் என்பது கி.மு. 400 முதல் கி.பி. 200 ஆண்டு வரை என்று கூறப்படுகிறது. கடைச் சங்கம் உத்தர மதுரையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொன்மையான தமிழ் நூல்களின் வாயிலாக மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் தெரியவருகிறது. ஆயினும் நூலின் வாயிலாக கிடைக்கப்பெற்ற இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் ஆராய்ச்சியாளர்களுக்கு எந்த ஒரு தடயமும் இது வரை கிடைக்கவில்லை. அதே சமயத்தில் இந்தக் குறிப்புகளை அறிவியல் முறைப்படி மறுக்கவும் இயலவில்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருந்தால் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் முன்பு நோக்கி செல்லும்.

புலவர் நக்கீரரின் உரையில் கடலில் மூழ்கிய குமரிக் கண்டத்தின் நிலப்பரப்பு குறித்த தகவல்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. குமரிக் கண்டத்தின் நிலப்பரப்பு பற்றி முதன் முதலில் சிலப்பதிகாரத்தில்தான் குறிப்புக்கள் காணப்படுகின்றன. வடக்கில் பஃறுளி ஆறிலிருந்து தெற்கில் குமரி ஆற்றின் கரை வரைக்கும் குமரிக் கண்டம் நீண்டிருந்ததாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் ஆராய்ச்சி

ஆராய்ச்சியாளர் இந்தியப் பெருங்கடலில் 1960 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும் தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆயினும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் குமரிக்கண்டம் இருந்தது பற்றி அறுதியிட்டு உறுதியாகக் கூறவில்லை. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த பனி யுகத்தின் போது இந்தியப் பெருங்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் வெளியே இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *