சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட முப்பெரும் அரச பரம்பரைகளில் ஒன்றான சேரர் பரம்பரையைச் சேர்ந்த சங்க கால மன்னர்களில் ஒருவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல். சங்க கால இலக்கியங்களில் இவன் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து பாடல் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பற்றி பாடுகிறது. காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பற்றி இந்தத் பாடலைப் பாடியுள்ளார். இந்தத் பாடலில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். அரசி பதுமன் தேவி என்பவள் வேள் ஆவிக் கோமான் பதுமன் எனும் அரசனின் இரண்டு மகள்களில் ஒருவள் ஆவாள். பதுமன் தேவி என்ற பெயர் பதுமன் என்ற பழனிமலைப் பகுதியை ஆண்ட அரசனின் மகள் என்பதைக் குறிக்கும்.
தந்தை
குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்பவன் பதிற்றுப்பத்து ஆறாம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் தந்தை. இவன் மனைவி வேள் ஆவிக் கோமான் பதுமன் என்பவனின் மகள். ஆராத் திருவின் சேரலாதன் என்பவன் நான்காம் பதிற்றுப்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் தந்தை. இவன் மனைவி வேள் ஆவிக் கோமான் பதுமன் என்பவனின் மகள். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் தந்தை யார் என்பதில் குழப்பம் நிலவுகிறது. குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் ஆராத் திருவின் சேரலாதன் இருவரும் ஒருவரே என்று வாதிப்பவரும் உண்டு.
களங்காய்க்கண்ணி
“வாலிதின் நூலின் இழையா நுண்மயிர் இழைய … சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து அவிர் இழை தைஇய நார்முடி ”
பதிற்றுப்பத்து 39
களாக்காய் போன்ற கருப்பு நிறம் உடைய மணிகளையும், முத்துக்களையும் பொன் இழைகளில் கோத்து பட்டுத்துணியில் மீது வைத்து வைத்து தைத்துச் செய்த மாலை. இந்த மாலையை களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தலைமுடியாக (தலைப்பாகை போன்ற மகுடம்) அணிந்துகொண்டிருந்தான் என்று பதிற்றுப்பத்து பாடல் விளக்குகிறது
ஆட்சி காலம்
சங்ககாலதில் ஆண்ட பிற மன்னர்களைப் போலவே இவனது ஆட்சி காலமும் காலமும் தெளிவாக அறியமுடியவில்லை. எனினும் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர், தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். ஆதலால் இந்தப் பாண்டிய மன்னனும், நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஏறக்குறைய 25 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.
போர்கள்
மன்னன் நன்னனை வென்று அவனது காவல்மரமான வாகைமரத்தை வெட்டி வீழ்த்தினான். போரின் வெற்றிக்குப் பின்னர் நேரி மலையை வணங்கினான். நெடுமிடல், கொடுமிடல் ஆகிய மன்னர்களை போரில் வென்றான்.
நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய
(பதிற்றுப்பத்து 32-10)
தோட்டி மலை
தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. யானையை அடக்க உதவும் அங்குசத்தின் தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. சேர மன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தோட்டி மலைக் கோட்டையை வென்று அவன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான்.
மற்ற தகவல்கள்
மேலும் இவன் ஆட்சி காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர் என்றும் இவன் தன் மக்கள் வேறு நாடுகளுக்கு குடிபெயர்வதைத் தடுத்தான் என்றும் கீழ் வரும் பாடல்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.
துளங்குகுடி விழுத்திணை திருத்தி
– பதிற்றுப்பத்து 31
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி
– பதிற்றுப்பத்து 32
வண்டன் என்பவன் சங்ககாலத்தில் வாழ்ந்த பெரும் பணக்காரன். வண்டனின் செல்வத்தைப் பாதுகாக்க கடவுள் அஞ்சி என்னும் அரசன் இவனுக்குத் தூங்கெயில் கதவம் அமைந்த கோட்டை ஒன்றைக் கட்டித் தந்திருந்தான். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இந்த வண்டன் போல் செல்வ வளம் மிக்கவன் என்று காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகிறார். – பதிற்றுப்பத்து 31