சேரமான் பெருஞ்சேரலாதன்

சங்க காலத்தில் சேர நாட்டை ஆண்ட புகழ்பெட்ற மன்னர்களுள் ஒருவன் சேரமான் பெருஞ்சேரலாதன். வரலாற்று முக்கியத்துவமும் சிறப்பும் மிக்க வெண்ணிப் போரில் தோல்வியைத் தழுவிய சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தான்.

வெண்ணிப் போர்

கரிகால சோழன் சோழ அறியாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னர் பெருஞ்சேரலாதன் மற்றும் பதினொரு வேளிர் குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.

வெண்ணிப் பறந்தலை

சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வென்றிடலாம் என்று எண்ணி போர் தொடுத்து வந்த அத்துனை பேரையும் அவர்கள் பெரும் படையையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை சுடினார். இப்போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார். இந்த நிகழ்வை மாமூலனார், கழாத்தலையார், வெண்ணிக் குயத்தியார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் பாடல்களாகப் பாடியுள்ளார்கள்.

சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்ததை விவரிக்க்கும் புறநானுற்றுப் பாடல் ஒன்று,

பாடல்கள்

புறநானுறு

“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்…..”
(புறம்- 65)

“நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலக மெய்திப்
புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே”
(புறம்-66)

அகநானுறு

“கரிகால் வளவ னொடு வெண்ணிப் பரந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள் வடக்கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும் பெறலுலகத் தவனோடு செலீஇயர்
பெரும் பிறிதாகி யாங்கு”
(அகம்-55)

மேலும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போரைப் பற்றி நாம் சங்ககால இலக்கியமான பொருநராற்றுப்படை வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. தற்போது தஞ்சாவூரில் இருந்து சுமார் 26 கிமி தொலைவில் உள்ள வெண்ணி என்ற ஊரில் இந்தப் போர் நடைபெற்றது இந்த ஊரின் தற்போதைய பெயர் கோவில்வெண்ணி.

இரங்கல்

சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்ததிற்கு வருந்திய போர்க்களம் அமைதியாகிவிட்டது. சோழ மன்னர் கரிகால சோழனின் வெற்றிமுரசு முழங்கவில்லை. பாணர்கள் யாழிசை கூட்டிப் பாடவில்லை. போரில் வென்ற சோழ நாட்டு வீரர்கள் வெற்றிக் களியாட்டங்களில் ஈடுபடவில்லை. ஊரிலுள்ள மக்கள் சுற்றத்தாருடன் தேறல் ( ஒரு வகை மது) அருந்தவில்லை. உழவர்கள் வயல்வெளியிலும் குரவை ஓசை எழுப்பவில்லை. ஊர் மக்கள் திருவிழாவைக் கூட மறந்துவிட்டனர் சங்ககாலப் பாடல்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *