மாந்தரஞ்சேரல் இரும்பொறை

சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர வேந்தர்களுள் ஒருவன். இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். இவன் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகன் ஆவான். இவன் கருவூர் மற்றும் மாந்தை ஆகிய இடங்களைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டான். இவன் மன்னனாக ஆண்ட காலம் சரியாகத் தெரியாவிடினும் கி.பி.141ம் ஆண்டை ஒட்டிய கால கட்டத்தில் இவன் சேர நாட்டை ஆண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சங்க காலப் புலவர்கள் ஆகிய குறுங்கோழியூர் கிழார், பேரிசாத்தனார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பற்றி பாடியுள்ளனர்.

பதிற்றுப்பது ஏழாம்பத்துப் பாட்டுடைத் தலைவன் சேரமான் செல்வக் கடுங்கோவை. சேரமான் செல்வக் கடுங்கோவை பாடிய புலவர் கபிலர் இல்லையே என்று சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வருத்தப்பட்டுக்கொள்வதால் இவன் சேரமான் செல்வக் கடுங்கோவைகுப் பின்னர் வந்தவன் என்பது புலனாகிறது. மேலும் “கபிலரைப் போல நான் பாடுவேன்” எனப் புலவர் இளங்கீரனார் குறிப்பிடுவதால் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பதிற்றுப்பத்து, பத்தாம் பத்தின் தலைவன் எனக் கொள்ளவது பொருத்தமானது.

பொருந்தில் இளங்கீரனார்

முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே ‘தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்’ என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே
(புறம்-53)

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தன் யானைப் படையுடன் சென்று போரிட்டு வென்று ஊரை அழித்த சிறப்பைப் பாடுவதற்குக் கபிலர் இல்லையே என்று கவலைப்பட்டான். புலவர் பொருந்தில் இளங்கீரனார் நான் இருக்கிறேன். உன் சிறப்புக்கு ஏற்ப நான் பாடுவேன் என்று குறி எழுதிய பாடல். ஆனால் உன் புகழை விரிவாக்க விரும்பினால் அது விரிந்துகொண்டே செல்கிறது. சுருக்கத் தொடங்கினால் மீதம் பட்டு நின்றுவிடுகிறது. எம் போன்ற அறியாமை மிக்க புலவர்களின் கைவரிசைக்கு அடங்கவில்லை. அதற்காகப் புகழ் மிக்கவர் பிறந்த உலகத்தில் நான் பாடாமல் வாழவும் முடியாது. எனவே பாடுகிறேன் என்கிறார் புலவர்.
புலவர் கபிலரை இந்தப் புலவர் இவ்வாறு பாராட்டுகிறார்.

குறுங்கோழியூர்க் கிழார்

தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா எல்லை,
குன்று, மலை, காடு, நாடு,
ஒன்று பட்டு வழிமொழிய,
கொடிது கடிந்து, கோல் திருத்தி,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடியாங்கு
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக்கூறலின்,
‘உண்டாகிய உயர் மண்ணும்,
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்’ எனவும்,
‘ஏந்து கொடி இறைப்புரிசை,
வீங்கு சிறை, வியல்அருப்பம்,
இழந்து வைகுதும், இனி நாம் இவன்
உடன்று நோக்கினன், பெரிது’ எனவும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழை என மருளும் பல் தோல், மலை எனத்
உடலுநர் உட்க வீங்கி, கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப,
இடி என முழங்கும் முரசின்,
வரையா ஈகைக் குடவர் கோவே!
(புறம்-17)

இரு முந்நீர்க் குட்டமும்,
வியல் ஞாலத்து அகலமும்,
வளி வழங்கு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை,
அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்:
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே;
திருவில் அல்லது கொலை வில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப்
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,
பகைவர் உண்ணா அரு மண்ணினையே;
அம்பு துஞ்சும் கடி அரணால்,
அறம் துஞ்சும் செங்கோலையே;
புதுப் புள் வரினும், பழம் புள் போகினும்,
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல்மாறே,
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே.
(புறம்-20)

குட்டநாட்டில் இளவரசனாயிருந்து அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டில் இளவரசனாயிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் (தற்போதைய பொள்ளாச்சி) இளவரசனாயிருந்து இருந்து அரசனானவன் பொறையன். இதேவரிசையில் மாந்தையிலிருந்து இளவரசனாயிருந்து அரசனானவன் இவன் என இவனைக் குறுங்கோழியூர் கிழார் பாராட்டுகிறார்.

மாந்தரஞ்சேரல் இரும்பொறை தொண்டி மக்களோடு போரிட்டு வென்றவன். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவனைப் பிடித்துச் சிறையில் வைத்திருந்தான். ஆனால் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சிறையைத் தகர்த்துக்கொண்டு தன் நாட்டுக்கு வந்து அரசனானான். கொல்லி நாட்டை வென்று தாக்கிக்கொண்டான். அரசர் பலர் இவ அடிபணிந்து கப்பம் தந்தனராம். இவன் நாடு நெல்லும் கரும்பும் விளையும் வளம் மிக்க நாடாக விளங்கியது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *