முத்தரையர் என்பவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த வரலாற்றுப் புகழ்மிக்க மற்றும் ஓர் குறுநில மன்னர்கள் ஆவார்கள். முத்தரையர் பரம்பரையில் வந்த மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றை ஒட்டிய செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தனர். செந்தலையில் கிடைத்த கல்வெட்டுகள் வாயிலாக இவர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று தெரிகிறது.
முற்காலாத்தில் ஜமீந்தராக வாழ்ந்த இவர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600ம் ஆண்டு முதல் கி.பி 900ம் ஆண்டு வரையில் சற்றேறக்குறைய 300 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்துவந்தனர். முத்தரையர், இரண்டாம் நூற்றாண்டில் எருமைநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்தவர்கள் என்று நம்பப்படுகிறது. இது தற்போதைய கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறுநில மன்னர்களான முத்தரையர்கள் அக்காலத்தில் பேரரசர்களாக விளங்கிய பல்லவப் பேரரசையும் பாண்டியப் பேரரசையும் சார்ந்தே ஆட்சி புரிந்து வந்துள்ளனர். இதே கால கட்டத்தில் சோழ மன்னர்களும் மாயவரம் மற்றும் சிதம்பரம் ஆகிய சிறு நிலப்பரப்பை ஆண்ட குறுநில மன்னர்களாக விளங்கினர்.
பாண்டிய மன்னன் வரகுணவர்ம பல்லவனின் ஆட்சி காலத்தில், விருப்பதினாலோ அல்லது வற்புறுதலினாலோ முத்தரையர்களின் மன்னர் இளங்கோ முத்தரையர்கள் ஆதரவை பாண்டியர்களுக்கு அளித்தார். இதைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் போர் மூண்டது. இந்த சமயத்தில் குறுநில மன்னராக விளங்கிய சோழ மன்னர் விஜயாலய சோழன் தஞ்சை மீது படை எடுத்துச் சென்றார். போரில் விஜயாலய சோழன் வெற்றி பெற்று தஞ்சையை அவரது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இந்த போரின் மூலம் தமிழகத்தில் முத்தரையர்கள் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது.
முத்தரையர்களில் மிக பிரபலமான மன்னர்களாக இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் மற்றும் அவன் மகன் இளங்கோவராயன் ஆவர். இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன் மற்றும் குவாவன் மாறன் என்றும் அழைக்கப்பட்டார். செந்தலையில் கிடைத்த கல்வெட்டு ஒன்று, தஞ்சாவூர் மற்றும் வல்லம் பகுதிகள் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் ஆட்சியின் கீழ் குறிப்பிடுகிறது.
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. ஏனினின் இதற்குப் பொடியை ஆதாரங்கள் ஏதும் இல்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுந்த பெருமாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு முத்தரையர் மன்னர் ஒருவர் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாதா ராவ் கருத்தின் படி இந்த மன்னர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆகும்.
சரித்திர ஆசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறனும், இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் பல்லவத் தலைவரான உதயச்சந்திரானும் சேர்ந்து கூட்டாக சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
முத்தரையரின் தோற்றம்
முத்தரையரின் தோற்றம் பற்றி சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களாகிய சேர, சோழ, மற்றும் பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி மற்றும் டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற சரித்திர அறிஞர்கள் கூறுகின்றனர். முத்தரையர்கள், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியர்களின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் ‘கயல்’ எனக் காணப்படுகிறது.
நாலடியார் பாடல்கள்
நாலடியார் பாடல்கள் கொடையில் சிறந்து விளங்கிய முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன
பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
கருனைச்சோ றார்வர் கயவர்; – கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும். 200
மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார். 296
கல்வெட்டுக் குறிப்புகள்
நார்த்தாமலைக் கல்வெட்டு
விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன் அனந்தனை மணந்தாள் என்று கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
குடுமியான் மலை கோயில் கல்வெட்டு
இக்கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” பெயரைக் குறிப்பிடுகிறது.
செந்தலைக் கல்வெட்டு
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பெயரை ஆவான். முத்தரைநல்லூர் என்பது திருச்சியை அடுத்துள்ள ஊர்
கோயில்
விஜயாலய சோழீஸ்வரம் கோயில்
இக்கோவில் கி.பி 840ம் ஆண்டு இளங்கோவதி முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது. கி.பி 852 இல் விஜயாலய சோழனுக்கும் இளங்கோவதி முத்தரையர்க்கும் நடந்த போரில் விஜயாலய சோழன் வென்றார். பிறகு இக்கோவிலுக்கு விஜயாலய சோழீஸ்வரம் என்று பெயர் சூடினார். கி.பி 865ம் ஆண்டு முத்தரைய மன்னர் மல்லன் வித்துமன், இக்கோவிலுக்கு நன்கொடையும், புனரமைப்பு பணிகளையும் செய்து உள்ளார்.
சிவன் கோயிலான விஜயாலய சோழீஸ்வரம் பழமையான பாறை வெட்டு கோவில்களில் ஒன்றாகும். தற்போது விஜயாலய சோழீஸ்வரம் கோயில் தொல்பொருள் ஆய்வுக் கழகத்தால் பராமரிக்கப்பட்டு ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக நிர்வகிக்கப்படுகிறது.
திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோயில்
இது ஒரு குகைக்கோயில். இங்கு பெருமாள் யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் குகைக்கோயிலைப் புதுப்பித்து இதன் பராமரிப்பிற்கு நன்கொடைகளை வழங்கிய செய்தியை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்
குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் சிவபெருமானுக்கு குகைக்கோயில் கட்டியது மற்றும் நன்கொடைகளை வழங்கிய செய்தி தெரிய வருகிறது.
கீழத்தானியம்
கீழத்தானியம் புதுக்கோட்டையிலிருந்து 29கி.மீ. தொலைவில் உள்ளது. இது இளங்கோ முத்தரையரால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் உத்தமனீஸ்வரர் என்று பெயரிடப்பட்டது.
Comments