சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மன் இறந்தபோது இவனின் மகன் இரண்டாம் புலிகேசி சிறுவனாக இருந்த காரணத்தால் முதலாம் கீர்த்திவர்மனின் தம்பி மங்களேசன் பகர ஆளுனராக சாளுக்கிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். மங்களேசன் கி.பி.596ம் ஆண்டு முதல் கி.பி. 610ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சிபுரிந்தான்.
பகர ஆளுனர்
பகர ஆளுனர் என்பது முடியாட்சி முறையில், ஒருவருக்குப் பதிலாக வேறொருவர் ஆட்சியைப் பொறுப்பை ஏற்று நடத்துவதாகும். அப்படிப் பதவியேற்று ஆட்சி செய்யும் ஒருவரை குறிக்கும் சொல் பகர ஆளுனர் ஆகும். பெரும்பாலும் ஒரு மன்னன் இறக்கும்போது முடிக்குரிய வாரிசு மிக இளம் வயதினராகவோ அல்லது அவ்விடத்தில் இல்லாதவராக அல்லது இயலாதவராக இருந்தால் அவர் சார்பில் பகர ஆளுனர் ஆட்சியை நடத்துவது உண்டு. இந்த காரணங்களைத் தவிர முடிக்குரிய வாரிசுகள் எவரும் இல்லை என்ற நிலையிலும் இடைக்கால ஆட்சிப் பொறுப்புக்கு ஒரு பகர ஆளுனர் நியமிக்கப்படுவது உண்டு. பெரும்பாலும், வாரிசுரிமைப்படி அடுத்த நிலையில் உள்ளவர் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பகர ஆளுனராக நியமிக்கப்படுவார்கள்.
மங்களேசன் அவனுக்கு முன்னர் சாளுக்கிய நாட்டை ஆண்ட முன்னோர்கள் போலவே சாளுக்கியப் பேரரசின் எல்லைகளை விரிவாக்கம் செய்தான். போர் வலிமையையும் ஆற்றலும் கொண்ட மங்களேசன் பல போர்களை நடத்தினான். மங்களேசன் பல நாடுகளை வெற்றி கொண்டான். மங்களேசன் ஆட்சிக்காலத்தில் சாளுக்கிய எல்லைகள் வெகுவாக விரிவடைந்தது.
மங்களேசன் புத்திராஜன் ஆட்சி செய்த காளச்சூரியின் மீது படையெடுத்து வெற்றிகொண்டான். இந்த வெற்றியைத் தொடர்ந்து குஜராத் , கந்தேசம், மால்வா ஆகிய நாடுகள் மீதும் படையெடுத்தான். மேலும் சுவாமிராஜா என்கிற ரேவதிதிவீபம் (கோவா) பகுதியின் ஆளுநரின் கலகத்தை அடக்கினான். கொங்கன் பகுதியில் மீண்டும் சாளுக்கிய அதிகாரத்தை நிலைநாட்டினான்.
மங்களேசனின் கி.பி.595ம் ஆண்டின் மகாகுத்தா தூண் கல்வெட்டின் வாயிலாக கங்கர் , பல்லவர் , சோழர் , அளுப்பர்,கதம்பர் ஆகியோரிடம் மங்களேசன் போர் புரிந்து வெற்றி பெற்றான் என்பதை அறிய முடிகிறது.
பட்டங்கள்
மங்களேசன் உருரணபராக்ரமன், இரணவிக்கிரமன், பரமபகவதா போன்ற பட்டங்களைப் பெற்றிருந்தான்.
முதலாம் கீர்த்திவர்மனின் மகன் இரண்டாம் புலிகேசிக்கு சாளுக்கிய நாட்டை ஆட்சி செலுத்துவதற்குரிய வயது வந்த போதும், மங்களேசன் இரண்டாம் புலிகேசியிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் தாமதப்படுத்தி வந்தான்.
சுந்தரவர்மன் என்பவன் மங்களேசனின் மகன் ஆவான். தன் மகன் சுந்தரவர்மனை சாளுக்கியப் பேரரசின் மன்னனாக்க வேண்டும் என்ற விருப்பத்தினால் தொடர்ந்து மங்களேசன் சாளுக்கிய மன்னனாக ஆட்சிப்பொறுப்பில் நீடித்தான்.
இந்த காரணத்தால் இரண்டாம் புலிகேசி தன் சிற்றப்பனை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டான். இரண்டாம் புலிகேசி தனது நண்பர்கள் பலர் உதவியுடன் படைதிரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். இரண்டாம் புலிகேசிக்கும் அவன் சிற்றப்பன் மங்களேசனுக்கும் இடையில் தற்போதைய அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இளப்பட்டு சிம்பிகை என்ற இடத்தில் போர் நடைபெற்றது. சாளுக்கியப் பேரரசின் ஆட்சி அதிகாரத்திற்காக நடைபெற்ற இந்தப்போரில் மங்களேசன் கொல்லப்பட்டான் . இந்தப் போர் பற்றிய குறிப்புக்கள் கி.பி.610ம் ஆண்டில் பேதவது-குரு கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது. போரின் முடிவில் இரண்டாம் புலிகேசி சாளுக்கியப் பேரரசின் மன்னனாகப் பதவியேற்றான்.
Comments