முதலாம் விக்ரமாதித்யன்

இரண்டாம் புலிகேசி

கி.பி. 630ம் ஆண்டு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது போர் தொடுத்தான். முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் காஞ்சியின் மீது இந்தப் படையெடுப்பு நடைபெற்றது. இரண்டாம் புலிகேசியால் பல்லவர்கள் தலைநகர் காஞ்சி முற்றுகையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்டப் போரில் பல்லவர்படை தோற்கடிக்கப்பட்டது. இப்போரில் மகேந்திரவர்ம பல்லவன் இறந்தான்.

இதற்கு பழி வாங்கும் பொருட்டு மகேந்திரவர்ம பல்லவனின் மகன் நரசிம்மவர்ம பல்லவன் கி.பி.642ம் ஆண்டு சாளுக்கியத் தலைநகர் வாதாபியின் மீது படையெடுத்துச் சென்றான். இப்படையில் ஒரு லட்சம் காலாட்படை வீரர்களும், ஐம்பதாயிரம் குதிரை வீரர்களும், பன்னிரெண்டாயிரம் யானைகளும் இருந்ததாக கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் கூறப்படுகின்றன. நரசிம்மவர்ம பல்லவன் இம்மாபெரும் படையெடுப்பை நடத்தி வாதாபி நகரை எரித்து பல்லவ குலத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கினான் என்பதை நம் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்ம பல்லவன் வாதாபி கொண்டான் என்ற பெயரால் அழைக்கப்பட்டான். இந்தப்போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டான்.

முதலாம் விக்ரமாதித்யன்

இரண்டாம் புலிகேசியின் மறைவுக்குப் பின்னர் சாளுக்கியப் பேரரசு குழப்ப நிலைக்கு உள்ளானது. சாளுக்கியப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசுகள் தங்களை சுதந்திர நாடாக அறிவித்தன. சாளுக்கியப் பேரரசின் இரண்டு பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் புலிகேசியின் மகன்கள் தனித்தனி அரசு அமைப்பதாக அறிவித்தனர். முதலாம் விக்ரமாதித்யன் தனது தாய்வழி தாத்தாவான மேலைக் கங்க மன்னன் பூவிக்ரமன் உதவியுடன், தன்னை பல்லவர் படையெடுப்பில் இருந்து பாதுகாத்து, நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்தினான். முதலாம் விக்ரமாதித்யன் இரண்டாம் புலிகேசியின் மூன்றாம் மகன் ஆவான்.

வாதாபியைக் கைப்பற்றிப் பல்லவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்தனர். முதலாம் விக்ரமாதித்யன் பல்லவர்களின் ஆளுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தான். முதலாம் விக்ரமாதித்யன் தனது சகோதரர்களையும், பேரரசிடமிருந்து சுயாட்சி கோரிய தலைவர்களையும் தோற்கடித்து உடைந்த சாளுக்கியப் பேரரசை ஒன்றாக்கினான். முதலாம் விக்ரமாதித்யன் தன்னை கி.பி.655ம் ஆண்டு சாளுக்கியப் பேரரசின் மன்னனாக அறிவித்துக்கொண்டான். முதலாம் விக்ரமாதித்யன் தனக்கு உதவியாக இருந்த தன் தம்பியான ஜெயசிம்மவர்மனை தென் குஜராத்தின் லதா பகுதிக்கு ஆளுநராக நியமித்தான்.

பல்லவப் பேரரசின் மன்னர்களான இரண்டாம் மகேந்திரவர்மன், அவனுக்குப்பின்னர் அவனது மகன் முதலாம் பரமேசுவரவர்மன் அகியோர்களிடமிருந்து சாளுக்கியப் பேரரரசை காப்பாற்ற பல்லவர்வர்களின் எதிரிகளான பாண்டியன் அரிகேசரி பாராங்குச மாறவர்மனுடன் கூட்டணி அமைத்தான். முதலாம் விக்ரமாதித்யன் மேற்கு கங்க இளவரசி கங்கமகாதேவியை மணந்து கொண்டான்.

முதலாம் விக்ரமாதித்யன் பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனின் ஆட்சியின் துவக்கத்தில் பெரும் படை திரட்டிக்கொண்டு பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நோக்கி முன்னேறினான். முதலாம் விக்ரமாதித்யன் படைகள் காவிரி கரையிலுள்ள உரையூரில் பாசறை அமைத்தது..

சாளுக்கியப் படைகளை எதிர்த்து பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் ஒரு பெரிய படையைத் திரட்டினான். கி.பி.670ம் ஆண்டு விலந்தி என்ற இடத்தில் சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் போர் நடைபெற்றது. சாளுக்கிய கூட்டுப்படைகளுக்கு மேலைகங்க மன்னனான பூவிக்கிரமன் தலைமைதாங்கி போரிட்டான். பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் இந்த போரில் வெற்றி பெற்றான்.

இதன் பின்னர் பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மன் தனது படைகளை சாளுக்கிய நாட்டைக் கைப்பற்ற அனுப்பி வைத்தான். கி.பி.674ம் ஆண்டு புருவாலனூர் என்ற இடத்தில் போர் நடந்தது. போரில் பல்லவர்கள் சாளுக்கிய படைகளை தோற்கடித்தனர். சாளுக்கிய படைகளுக்கு விக்ரமாதித்யனின் மகன் வினையாதிதன் மற்றும் பேரன் விஜயாதித்தன் ஆகியோர் தலைமைதாங்கினர். பல்லவர்களின் படைகள் சாளுக்கிய நிலத்தை ஆக்கிரமித்தன. சாளுக்கியர் ஆண்டுதோரும் பல்லவப் பேரரசிற்கு கப்பம் செலுத்த ஒப்புக்கொண்டனர். முதலாம் விக்ரமாதித்யன் கி.பி. 680ம் ஆண்டு இறந்தான். முதலாம் விக்ரமாதித்யனின் மறைவுக்குப் பின்னர் அவன் மகன் வினையாதித்தன் சாளுக்கிய மன்னனாகப் பதவியேற்றான்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *