இரண்டாம் விக்ரமாதித்தன்

சாளுக்கிய மன்னன் விஜயாதித்தன் இறந்தபின் அவன் மகன் இரண்டாம் விக்ரமாதித்தன் சாளுக்கிய மன்னனாக ஆட்சிப்ப பொறுப்பை ஏற்றான். இரண்டாம் விக்ரமாதித்தன் கிபி 733ம் ஆண்டு முதல் கி.பி.744ம் ஆண்டு வரையில் ஆட்சி புரிந்தான்.

லகஷ்மேஷ்வர கல்வெட்டு

லகஷ்மேஷ்வர் கன்னடக் கல்வெட்டு வாயிலாக இந்தத் தகவலை நாம் அறியமுடிகிறது. மேலும் இக்கல்வெட்டு வாயிலாக இரண்டாம் விக்ரமாதித்தன் இளவரசனாக முடிசூடப்பட்டு, சாளுக்கியர்களின் பரம்பரை எதிரிகளான பல்லவர்களுக்கு எதிராக நடந்த போர்களில் கலந்துகொண்டான் என்று அறியமுடிகிறது.

விருபாக்ஷா கோயில் கல்வெட்டுகள்

இரண்டாம் விக்ரமாதித்தன் மூன்று வெவ்வேறு சந்தர்பங்களில் பல்லவர்களுடம் போரில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடினான். முதல் முறை இளவரசனாக இருந்தபொழுது, இரண்டாம் முறை சாளுக்கிய மன்னனாக இருந்தபொழுது, மூன்றாம் முறை இவனது மகன் மற்றும் முடிக்குரிய இளவரசர் இரண்டாம் கீர்த்திவர்மன் தலைமையின் கீழ் என மூன்று முறை பல்லவர்களை வெற்றிகொண்டான். விருபாக்ஷா கோயில் கல்வெட்டுகள் வாயிலாக நாம் இந்தத் தகவலைப் பெற முடிகிறது.

பட்டடக்கல் என்னுமிடத்தில் இரண்டாம் விக்ரமாதித்தனின் அரசிகள் லோகதேவி, திரிலோகதேவி ஆகியோர் மூலம் பிரபலமான விருபாக்ஷா கோயில் (அ) லோகேஸ்வரா கோயில், மல்லிகார்ஜுன கோயில் (அ) திரிலோகேஸ்வரா கோயில் ஆகிய கோயில்கள் கட்டப்பட்டன.

இரண்டாம் விக்ரமாதித்யனின் கல்வெட்டுகள் தரும் தகவல்கள் வாயிலாக பல்லவர்கள் மீது இவன் கொண்ட பகை உணர்வு வெளிப்படுவதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பல்லவர்கள் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தலைமையின் கீழ், சாளுக்கியர்களைத் தோற்கடித்து அவர்களின் தலைநகரான வாதாபியை அழித்தனர். இது இரண்டாம் புலிகேசியால் புகழ்பெற்ற சாளுக்கியப் பரமபரைக்கு ஏற்பட்ட பெருத்த அவமானம். இதனால் பல்லவர்களை முற்றாக அழித்து ஒழிப்பதன் மூலம் சாளுக்கியர்கள் இழந்த பெருமையை மீட்க முடியும் என்று இரண்டாம் விக்ரமாதித்தன் கருதியதாக கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.

முதலாம் பல்லவப் போர்

இரண்டாம் விக்ரமாதித்தன் ஆட்சிக்கு வந்த உடன், பல்லவ நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரால் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டாம் விக்ரமாதித்தன், பல்லவர்கள் மீது பல போர்களை நடத்தினான்.

இரண்டாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சி காலத்தின் போது கி.பி.730ம் ஆண்டு ஒட்டி இரண்டாம் விக்ரமாதித்தன் இளவரசனாக இருந்தபொழுது அவன் நண்பன் மேலைக் கங்க மரபின் இளவரசன் இரேயப்பா பல்லவ நாட்டின் மீது போர்தொடுத்தான். கங்கர்கள் படை மற்றும் சாளுக்கியர்களின் படை ஆகிய இரண்டு படைகளும் இணைந்த ஒரு பெரும் படைக்கு மேலைக் கங்க இளவரசன் இரேயப்பா தலைமை வகித்தான். இந்தப் போரில் இரண்டாம் பரமேசுவரவர்மன் தோல்வியடைந்தான். மேலும் பல்லவ படைகளும் பெரும் சேதத்திற்கு உள்ளாயின. போரில் தோல்வியைத் தழுவிய இரண்டாம் பரமேசுவரவர்மன் வேறு வழி ஏதும் இன்றி சாளுக்கியர்களுடன் சமாதானம் செய்துகொண்டான். இதன் படி சாளுக்கியர்களின் அணைத்து நிபந்தனைகளையும் இரண்டாம் பரமேசுவரவர்மன் ஏற்றான்.

போரில் தோற்றதால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க எண்ணிய இரண்டாம் பரமேசுவரவர்மன், சிறிது காலத்திற்கு பிறகு கி.பி.731ம் ஆண்டில் மேலைக் கங்க நாட்டின் மீது போர் தொடுத்தான். மேலை கங்க மன்னன் சிறீபுருசனுக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கும் இடையில் இந்தப் போர் நடைபெற்றது. விலந்து என்ற இடத்தில் நடந்த இந்தப் போரில் மேலை கங்கை மன்னன் சிறீபுருசனால் இரண்டாம் பரமேசுவரவர்மன் போரில் கொல்லப்பட்டான். சிறீபுருசன் இரண்டாம் பரமேசுவரவர்மனின் முத்திரை, வெண்கொற்றக் குடை போன்றவற்றைக் கைப்பற்றி பெருமானடி என்ற பட்டம் பெற்றான். சாளுக்கிய மன்னன் விஜயாதித்தன் காலகட்டத்தில் இந்தப் போர் நிகழ்திருந்தாலும் சாளுக்கிய மன்னர்களின் பதிவுகள் இவ்வெற்றி சாளுக்கிய இளவரசன் இரண்டாம் விக்ரமாதித்யனைச் சேருவதாக புகழ்கின்றன. இரண்டாம் பரமேஸ்வரவர்மன் போரில் வாரிசுகள் ஏதும் அற்ற நிலையில் இறந்தான். இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இறந்ததைத் தொடர்ந்து, சிம்மவிஷ்ணுவின் வழிவந்த பல்லவ மன்னர்களின் பரம்பரை முடிவுற்றது.

இரண்டாம் பல்லவப் போர்

மன்னர் வாரிசு நிலையில் பல்லவ நாடு எதிரிகளின் கைகளின் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் சென்றனர். பல்லவ மன்னன் மூன்றாம் சிம்மவர்மனின் இளைய மகனும் மற்றும் களப்பிரரை தமிழகத்தில் வென்று பல்லவ சாம்ராஜ்ஜியத்தை வலுப்பெறச் செய்த சிம்மவிஷ்ணுவின் தம்பியுமான பீமவர்மன் கம்புஜதேசதில் பல்லவர் வழி வந்த சென்லா வம்சத்தை துவக்கி வைத்தான். கம்புஜதேசம் அல்லது காம்புஜ நாடு என்பது தற்போதைய கம்போடியா, வியட்னாம் மற்றும் லாவோஸ் நாடுகளை உள்ளடக்கிய நாடாகும். பீமவர்மன் வழிவந்த இரண்டாம் நந்திவர்மன் கி.பி 732ம் ஆண்டு பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் மன்னனாகப் பதவியேற்றான்.

இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மன்னனாகிப் பதவியேற்றதும் இரண்டாம் விக்ரமாதித்தன் மீண்டும் பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தான். அப்பொழுது இரண்டாம் நந்திவர்மனுக்கு வயது பதின்மூன்று. இந்தப் போரில் பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டாலும், பல்லவர் படைகளின் பலத்தால் ஆட்சிப் பகுதியில் எந்தவிதமான இழப்பும் இல்லாமல் பல்லவ சாம்ராஜ்ஜியம் மீண்டது.

காஞ்சிபுரம் நகர சாலையில் இரண்டாம் விக்ரமாதித்தன் வெற்றிகரமாக நுழைந்தான். காஞ்சிபுரம் கோயில்களுக்கு நிவந்தங்களை அளித்தான் என்று கைலாசநாதர் கோவில் மண்டபத்தின் தூணில் கன்னட மொழிக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்ற கோயில்களுக்கு அவன் அளித்தவை அவனது செப்புத் தகடுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்தப் போர்களின் மூலம் பல்லவ ஆக்கிரமிப்பினால் சாளுக்கிய பேரரசிற்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்தான். நரசிம்மவர்ம பல்லவனின் செயலுக்கு பழிவாங்கி இரண்டாம் விக்ரமாதித்தன் வாதாபி திரும்பினான்.

மூன்றாம் பல்லவப் போர்

இரண்டாம் விக்ரமாதித்தனின் ஆட்சியின் இறுதியில் இவன் மகன் இளவரசன் இரண்டாம் கீர்த்திவர்மன் தலைமையின் கீழ் பல்லவர்களின் மீதான போர் நடந்தது. இதிலும் சாளுக்கியர்கள் வென்றனர்.

இரண்டாம் விக்ரமாதித்தனின் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகளில், சிந்து பகுதியை ஆண்ட அரபு மன்னர்கள் தக்கானத்தின் மீது படையெடுத்தனர். இதை சாளுக்கிய பேரரசின் லதா பகுதியின் ஆளுநரான இரண்டாம் விக்ரமாதித்தனின் தாயாதியான புலிகேசி என்பவன் அவர்களுடன் போராடி 739-ல் அவர்களைத் தோற்க்கடிதான் . மேலும் இராஷ்டிரகூட மன்னன் தந்திவர்மன் அல்லது தந்திதுர்காவும் சாளுக்கியருடன் இணைந்து அரேபியரை எதிர்த்து போர் புரிந்தனர். லதா பகுதி தற்போதைய குஜராத் மாநிலத்தை குறிக்கும்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *