ஹொய்சாளர்கள் வரலாறு

ஹொய்சாளர்கள் அல்லது போசாளர்கள் என்பவர்கள் இன்றைய கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளை பத்தாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்த மன்னர் பரம்பரையினர் ஆவர். ஹொய்சாளப் பேரரசு தென்னிந்தியாவின் மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றாகும். ஹொய்சாள மன்னர்கள் முதலில் பேளூரைத் தலைநகராகக் கொண்டும் பின்னர் ஹளேபீடுவைத் தலைநகராகக் கொண்டும் ஆண்டு வந்தனர்.

ஹொய்சாளப் பேரரசர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேட்டுப் பகுதியான கர்நாடகவின் மலைநாடு பகுதிவாழ் மக்களின் வழிவந்தவர்கள். 12 ஆம் நூற்றாண்டில், மேற்குப் ப‌குதியை ஆண்ட‌ சாளுக்கிய‌ர்க‌ளுக்குள் ம‌ற்றும் கால‌ச்சூரி பேரரசுக்குள்ளும் ந‌ட‌ந்த‌ உள்நாட்டுப் போரைத் த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மாக்கிக் கொண்டு, த‌ங்க‌ள‌து எல்லைக‌ளை இன்றைய‌ க‌ர்நாட‌க‌ப் ப‌குதிக‌ளுக்கும் ம‌ற்றும் இன்றைய‌த் த‌மிழ்நாட்டிலிருக்கும் விளைச்சல் நிலங்கள் நிறைந்த காவிரியாற்றின் வ‌ட‌க்குப் ப‌குதிக்கும் விரிவுப்ப‌டுத்தின‌ர். 13ம் நூற்றாண்டிலே, அவர்கள் இந்தியாவில் இன்றைய கர்நாடகாவின் பெரும்பாலானப் பகுதிகளையும் , தமிழகத்தின் ஒருசிலப் பகுதிகளையும் மற்றும் வடக்கு ஆந்திரப்பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தென்னிந்தியாவில் கலை, கட்டிடக்கலை, சமயம் இவற்றின் வளர்ச்சியில் ஹொய்சாள மன்னர்களின் ஆட்சிக்காலம் மிக‌ முக்கியமானதாகும். முதன்மையாகக் கோவில்களின் கட்டிடக்கலைக்காக ஹொய்சாளப் பேரரசர்கள் இன்றும் நினைவுக்கூறப்படுகிறார்கள். ஹொய்சாள மன்னர்கள் கட்டிய நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கர்நாடகா முழுவதும் இன்றும் காணப்படுகின்றன, அவைகளில் பெருமை வாய்ந்தவை பேளூரி்ல் உள்ள சென்னகேசவ கோவில், ஹளபீடில் உள்ள ஹொய்சாலசுவரா கோவில், சோமநாதபுரத்தில் உள்ள கேசவக் கோவில் ஆகியன. ஹொய்சாள மன்னர்கள் தொடர்ந்து கலைகளை வளர்த்து வந்தனர். அவர்கள் இடைவிடாது அளித்த‌ ஊக்கம் இலக்கியங்கள் கன்னடத்திலும், சமிஸ்கிருதம் வளர்வதற்கு வழிசெய்தன. ஹொய்சாள மன்னர்கள் சமணம் மற்றும் இந்து சமயங்களைப் பின்பற்றினர். விஷ்னுவர்த்தனன் என்ற மன்னரும் அவருடைய வாரிசுகளும் வைணவர்கள் ஆவர்.

இரண்டாம் நிருபகாமா

இரண்டாம் நிருபகாமா என்பவன் கர்நாடகத்தின் மலைநாட்டுப் பகுதியிலிருந்து வந்த ஒரு ஆரம்பகால ஹொய்சாள மன்னனாவான். இவன் கி.பி. 1026ம் ஆண்டு முதல் கி.பி. 1047ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். தெற்கு கர்நாடகப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய சோழர்களுக்கு எதிராகப் போர்புரிந்தாலும், இன்றைய கர்நாடக தெற்குப் பகுதிகளிலிருந்து சோழர்களை முறியடிக்க முடியவில்லை. இருந்தும் இவன் வெற்றிகரமாகச் சில பகுதிகளில் ஆட்சி செலுத்தினான்.

ஒய்சாள வினையாதித்யன்

இரண்டாம் நிருபகாமா வுக்குப் பின்னர் வினையாதித்யன் என்பவன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனானான். இவன் கி.பி. 1047ம் ஆண்டு முதல் கி.பி. 1098ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இவனது காலத்தில் ஹொய்சாள மன்னர்கள் சமண சமயத்தை ஏற்றனர். இவன் தனதருகில் உள்ள சிற்றரசுகளை வேண்டிற்று பெற்று நாட்டின் எல்லையை விரிவாக்கினான். மேலைக் கங்கர்களை சோழர்கள் வெற்றிகொண்டு கங்கப்பாடியைக் கைப்பற்றியபோது இவன் கங்கபாடியின் சில சிறிய பகுதிகளைத் தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டான். இவன் சாளுக்கிய சோமேசுவரனுடன் திருமண உறவைப் பேணியவன். சாளுக்கிய மன்னன் சோமேசுவரனுக்கு இவன் மாமனாராவோ அல்லது மருமகனாகவோ இருந்தான்.

இரியங்கா

ஒய்சாள வினையாதித்யனுக்குப் பின்னர் அவன் மகன் இரியங்கா ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றறான். இரியங்கா கி.பி. 1098ம் ஆண்டு முதல் கி.பி. 1102ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இவன் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இளவரசனாக இருந்தபோது தனது தந்தையுடன் சிறப்பாகப் பணியாற்றினான். இவன் சமண சமயப் பற்றாளனாக இருந்தான்

முதலாம் வீர வல்லாளன்

இரியங்காவிற்குப் பின்னர் முதலாம் வீர வல்லாளன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றறான். முதலாம் வீர வல்லாளன் கி.பி. 1102ஆண்டு முதல் கி.பி. 1108ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இவன் ஒரு சமண சமயப் பற்றாளனாவான். இவனும் வெகு குறுகிய காலமே ஆட்சிசெய்தான். இவன் ஆட்சியில் மேலைச் சாளுக்கியர்களுக்கு அடங்கிய சிற்றரசாகவே ஹொய்சாள நாடு இருந்தது. சுயாட்சி பெற இவன் செய்த முயற்சியை மேலைச் சாளுக்கிய மன்னனான ஆறாம் விக்கிரமாதித்தன் முறியடித்துத் தனது மேலாண்மையை நிலைநாட்டினான்

விஷ்ணுவர்தனன்

முதலாம் வீர வல்லாளனுக்குப் பின்னர் விஷ்ணுவர்தனன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றறான். விஷ்ணுவர்தனன் கி.பி. 1108ஆண்டு முதல் கி.பி. 1152ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இவன் முதலாம் வீர வல்லாளனின் தம்பி ஆவான். முதலில் விஷ்ணுவர்தனன் தன் முன்னோர்களைப் போலவே சமண சமயத்தைப் பின்பற்றுபவனாக இருந்தான். பிட்டி தேவா என அழைக்கப்பட்ட இவன், வைணவ தத்துவாதியான இராமானுஜரால் சமண சமையத்தைத் துறந்து வைணவரானார். பிட்டி தேவா என்ற தன பெயரை விஷ்ணுவர்தனன் என்று மாற்றிக்கொண்டான். விஷ்ணுவர்தனன் மேலைச் சாளுக்கிய மன்னரான ஆறாம் விக்ரமாதித்யனுடன் போரிட்டு ஹொய்சாள நாட்டிற்கு சுயாட்சி பெற்றுத்தந்தான். மேலும் சோழர் ஆட்சியின் கீழ் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கர்நாடகா, கொங்கு நாட்டின் வடபகுதி) பகுதிகளின் சில பகுதிகளைத் தன் ஹொய்சாள அரசுடன் இணைத்துக்கொண்டான். சரித்திர ஆராய்ச்சியாளர்கள்
விஷ்ணுவர்தனை ஹொய்சாள மன்னர்களில் சிறந்தவனாகக் கருதுகின்றனர். இவன் காலத்தில் கன்னட இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. பல இலக்கியங்களும் படைக்கப்பட்டது.

முதலாம் நரசிம்மன்

விஷ்ணுவர்தனுக்குப் பின்னர் முதலாம் நரசிம்மன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றறான். முதலாம் நரசிம்மன் கி.பி. 1152ம் ஆண்டு முதல் கி.பி. 1173ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். முதலாம் நரசிம்மன் காலத்திலேயே மேலைச் சாளுக்கிய மன்னனான மூன்றாம் தைலப்பனை எதிர்த்து ஹொய்சாளர்கள் முழுமையாகச் சுயாட்சி பெற்றனர்.

இரண்டாம் வீர வல்லாளன்

முதலாம் நரசிம்மனுக்குப் பின்னர் இரண்டாம் வீர வல்லாளன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றறான். இரண்டாம் வீர வல்லாளன் கி.பி. 1173ம் ஆண்டு முதல் கி.பி. 1220ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இரண்டாம் வீர வல்லாளன் ஹொய்சாள மன்னர்களுள் மிகவும் குறிப்பிடத் தக்க மன்னனவான். தேவகிரி யாதவர்கள் , தெற்கு கலச்சூரி , மதுரை பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர் ஆகியோருக்கு எதிரான அவனது வெற்றிகள் குறிப்பிடத்தக்கது. வலுவிழக்கும் நிலையில் இருந்த சோழர்களுக்கு உதவியாகப் ஹொய்சாளர்கள் கைகுடுத்தனர். இரண்டாம் வீர வல்லாளனின் மகன் இளவரசன் இரண்டாம் வீர நரசிம்மன் போரிலும் , ஆட்சியிலும் தனது தந்தைக்கு ஆதரவாக இருந்தான்

இரண்டாம் வீர நரசிம்மன்

இரண்டாம் வீர வல்லாளனுக்குப் பின்னர் அவன் மகன் இரண்டாம் வீர நரசிம்மன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றறான். இரண்டாம் வீர நரசிம்மன் கி.பி. 1220ம் ஆண்டு முதல் கி.பி. 1235ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இரண்டாம் வீர நரசிம்மன் ஆட்சிக்காலத்தில் ஹொய்சாளர்கள் தமிழ் நாட்டு விவகாரங்களில் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்தனர். இவன் காலத்தில் காடவர், பாண்டியர் ஆகியோருடன் போர்களில் ஈடுபட்டான். இரண்டாம் வீர நரசிம்மன் தீவிர வைணவன்.

சோழ நாட்டில் கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் பாண்டியர்களின் உதவி கொண்டு வைணவக் கோயில்களை சூறையாடுவதையும் சோழ மன்னனும் தனது மருமகனுமான மூன்றாம் இராஜராஜ சோழனை சிறையெடுத்ததையும் அறிந்த இரண்டாம் வீர நரசிம்மன் படை எடுத்துவந்தான். போரில் கோப்பெருஞ்சிங்கனை தோற்கடித்து மூன்றாம் இராஜராஜ சோழனை சிறையிலிருந்து மீட்டான். மேலும் பாண்டியர்கள் மீது படையெடுத்துச் சென்று காவிரி வரையிலான பகுதிகளை மூன்றாம் இராஜராஜ சோழனுக்கு மீட்டுக் கொடுத்தான். திருவரங்கம் அருகில் கண்ணணூர் குப்பம் என்ற இடத்தில் தமிழ் நாட்டு விவகாரங்கள்மீது நெருங்கிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டைப் பராமரிக்க அவரது இரண்டாவது தலைநகரை அமைத்தான். கன்னட கவிஞர் சுமனோபனா இரண்டாம் வீர நரசிம்மனின் அவைக்களப் புலவராக இருந்தார் இரண்டாம் வீர நரசிம்மன் ஆட்சியின்போது, நெல்லூர் தெலுங்குச் சோழர்கள் , வாரங்கல்லின் காகதீய வம்சத்தினர், மதுரை பாண்டியர்கள் ஆகியோர்களின் படைகளிடமிருந்து ஹொய்சாள ஆட்சிப் பகுதிகளைப் பாதுகாக்க காஞ்சியில் ஹொய்சாளப் படைகள் நிலைகொண்டிருந்தது.

வீர சோமேசுவரன்

இரண்டாம் வீர நரசிம்மனுக்குப் பின்னர் அவன் மகன் வீர சோமேசுவரன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றான். வீர சோமேசுவரன் கி.பி. 1235ம் ஆண்டு முதல் கி.பி. 1254ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். தமிழ் நாட்டு விவகாரங்களில் இரண்டாம் வீர நரசிம்மன் அதிக கவனம் செலுத்தி, வடக்கு பிரதேசங்களைப் புறக்கணித்ததின் விளைவாக, யாதவர்களின் படைகளிடம் துங்கபத்திரை ஆற்றுப் பகுதிகளில் சில பகுதிகளை இவன் இழக்க வேண்டியிருந்தது.

கி.பி.1225-1250 காலப்பகுதியில் ஹொய்சாளர்கள் சோழர்கள், பாண்டியர்கள் மீது தமது செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொண்டனர். மகதி மண்டலத்தில் சில பகுதிகளை வீர சோமேசுவரன் 1236-இல் கைப்பற்றினான்.

பாண்டிய மன்னர்களின் பரம்பரையில் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் மிக்கவனாகவும் விளங்கினான். பாண்டியர்களின் எழுச்சி கண்ட ஹொய்சாள மன்னன், சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடக்குவதற்காக சோழர்களிடம் நட்புக்கரம் நீட்டினான். ஹொய்சாள மன்னனின் நட்பை ஏற்றுக்கொண்ட மூன்றாம் ராஜேந்திர சோழன் வீர சோமேஸ்வரனின் மகன் வீர ராமநாதன் என்பவனை சோழ நாட்டில் கண்ணனூர் என்ற இடத்தின் மன்னனாக்கி அங்கிருந்தபடி ஆட்சி புரியும்படி அமர்த்தினான்.

மூன்றாம் நரசிம்மன்

வீர சோமேசுவரனுக்குப் பின்னர் அவன் மகன் மூன்றாம் நரசிம்மன் ஹொய்சாள நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றான். மூன்றாம் நரசிம்மன் கி.பி. 1254ம் ஆண்டு முதல் கி.பி. 1291ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். மூன்றாம் நரசிம்மனின் ஆட்சியின்போது கண்ணணூரில் ஆண்டுவந்த இவனுடைய சகோதரன் வீர இராமநாதனுடன் பகை ஏற்பட்டது. வடக்கிலிருந்த யாதவர்கள் படையெடுத்து வந்து மூன்றாம் நரசிம்மனின் தலைநகரான அலேபேடுவை தாக்கினர். எனினும் மூன்றாம் நரசிம்மன் தனது மகன் மூன்றாம் வல்லாளனின் துணையுடன் தன் நாட்டைப் பாதுகாத்துக் கொண்டான்.

வீர இராமநாதன்

வீர சோமேசுவரன் தனது பேரரசை இரண்டாகப் பிரித்து நாட்டின் வடக்குப் பகுதியான கர்நாடகப் பகுதியைத் தன் மகன் மூன்றாம் நரசிம்மனுக்கும் தெற்குப் பகுதியான தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியை மற்றொரு மகனான வீர இராமநாதனுக்கும் அளித்தான். நாடு விரிவாக இருந்ததாலும், நிர்வாக வசதிக்காகவும் அமைதியான முறையில் நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. வீர இராமநாதன் குந்தாணியை (இன்றைய கிருட்டிணகிரி வட்டம் சின்னகொத்தூர் கிராமம்) தன் தலைநகராகக் கொண்டான். இவன் கி.பி. 1254ம் ஆண்டு முதல் கி.பி. 1295ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தான். இவனின் ஆறாம் ஆட்சியாண்டு முதல் நாற்பத்தொன்றாம் ஆட்சியாண்டுவரையான கல்வெட்டுகள் இங்குக் கிடைக்கின்றன.

சோழப் பேரரசு வீழ்ச்சியுற்று பாண்டிய பேரரசு எழுச்சியுற்றது. இது வீர இராமநாதனுக்கு ஆபத்தானது. மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் சோழர்கள் , ஹொய்சாளர்கள் ஆட்சிப்பகுதிகளை வென்றான். இவ்வாறு தமிழகப் பகுதிகளை இழந்ததால், தன் தமையனான மூன்றாம் நரசிம்மனோடு கலகம் செய்து அவனிடமிருந்து பெங்களூர், கோலார், தும்கூர் ஆகிய பகுதிகளைப் பெற்றான்

மூன்றாம் வீர வல்லாளன்

மூன்றாம் வீர வல்லாளன் (ஆட்சிக்காலம் 1291-1343) என்பவன் ஹொய்சாளர்களில் கடைசி மாமன்னனாவான். இவனது ஆட்சியின்போது நாட்டின் வடக்கு, தெற்கு கிளைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இது தற்கால கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி ஆகும். ஹளேபீடுவில் அல்லது துவாரகாசமுத்திரம் இருந்து ஆட்சிசெய்யப்பட்டது. இவனது ஆட்சியின்போது, பல போர்களைத் தேவகிரி யாதவர்கள் , மதுரை பாண்டியர்களுடனும், தென்னிந்திய சிற்றரசர்களுக்கு எதிராகவும் நடத்தினான். கி.பி.1343 இல் இவனது மரணத்துக்குப் பின், தென் இந்தியாவில் ஒரு புதிய இந்து மதப் பேரரசாக விஜயநகரப் பேரரசு தோன்றி வளர்ந்தது. கி.பி.1303 இல், மூன்றாம் வீர வல்லாளன் தனக்கு அடங்காமல் இருந்த துளு நாட்டு அளுப்பர்களை அடக்கினான். யாதவர்களை ஒடுக்க அவர்கள்மீது கி.பி.1305 இல் படையெடுத்து ஹொல்லல்கெரேயிலிருந்து அவர்களை லக்குண்டி என்ற இடம்வரை பின்வாங்கச் செய்தான்.

மதுரையில் வீர பாண்டியனுக்கும், சுந்தர பாண்டியனுக்கும் நடந்த போட்டியில் சுந்தர பாண்டியனை ஆதரித்து அவனை அரசனாக்கி தனது ஆதிக்கத்தைத் தமிழகத்தில் நிலைநிறுத்திக் கொண்டான். தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் ஆணையின்படி மாலிக் கபூர் தென்னிந்தியாமீது படையெடுத்து வந்தான். 1311ல் ஹொய்சாள நாட்டின் ஹளேபீடுவை முற்றுகையிட்டான். ஆனால் மூன்றாம் வீரவல்லாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சிப் போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி துவார சமுத்திர அரசின் கருவூலத்தில் இருந்த அனைத்துச் செல்வங்களையும் மாலிக் கபூர் கைப்பற்றினான். மேலும் ஹொய்சாள நாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டுதோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது.

கி.பி.1318இல் தேவகிரி தில்லி சுல்தானால் ஆக்கிரமிக்கப்பட்டதன் மூலம், யாதவ ராஜ்யம் முற்றிலும் அழிந்து விட்டது. அங்குத் தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் ஆட்சி நடந்து வந்தது. மூன்றாம் வீர வல்லாளன் தில்லிக்குத் திரை செலுத்த மறுத்துத் தனது முந்தைய ஒப்பந்தத்திலிருந்து விலகினான். இதனால் துக்ளக் கி.பி.1327 தெற்கில் மீண்டும் ஒரு படையை அனுப்பினான் ஹளேபீடுவை இரண்டாவது முறையாகத் தில்லி படைகள் கொள்ளையிட்டன. இதனால் மூன்றாம் வீர வல்லாளன் பின்வாங்கிச் சென்று திருவண்ணாமலையிலிருந்து தனது எதிர்ப்பைத் தொடர்ந்தான். கி.பி.1336 வாக்கில் தென்னிந்தியாவின் ஹொய்சாளர்களைத்தவிர அனைத்து இந்து அரசுகளும் தில்லியால் தோற்கடிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகள் தில்லி சுல்தானகத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டது. மதுரையும் சுல்தான் ஆட்சியில் கி.பி.1335-6 காலகட்டத்தில் இருந்தது. முஸ்லீம் படையெடுப்பை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், மூன்றாம் வீர வல்லாளன் துங்கபத்ரை ஆற்றங்கரையில் ஹொசபட்டணா எனும் இரண்டாவது தலைநகரை நிறுவினான். இதுவே பின்னர் வந்த விஜயநகரம் என்ற பெயருடன் விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது. கி.பி.1342-3 இல், ஹொய்சாளர்களின் வருங்காலத்தை முடிவுசெய்யும் வகையில் கடுமையான போர் மூன்றாம் வீர வல்லாளனுக்கும் மதுரை சுல்தானகத்தின் சுல்தான் கியாஸ்-உத்-தின் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. முதலில் வெற்றி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் (1343) போது வல்லாளன் சுல்தானின் படைகளால் சிறைபிடிக்கப்பட்டான். இதன்பிறகு வல்லாலனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தார். போசாள மன்னன் மதுரை சுல்தான்களால் பிடிபட்டு கொல்லப்பட்டதால், போரின் முடிவு துக்ககரமாக மாறியது. அவரது மகன், நான்காம் வீர வல்லாளனுடன் ஹொய்சாளர்களின் ஆட்சி கி.பி.1346யுடன் முடிவுக்கு வந்தது.

மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீர வல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன்.மாதப்ப தண்டநாயக்கன், மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான். பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானிசாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *