விஜயநகரப் பேரரசு – பகுதி 1

முதலாம் ஹரிஹரர்

மன்னர் முதலாம் ஹரிஹரர் விஜயநகரப் பேரரசை நிறுவியவர் ஆவார். இவர் கி.பி. 1336ம் ஆண்டு முதல் கி.பி.1356ம் ஆண்டு வரையில் ஆட்சிபுரிந்தார். மேலும் இவர் ஹக்கா சங்கம மரபைத் தொடங்கியவரான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் சங்கம மரபு முதலாவதாகும். முதலாம் ஹரிஹரர் ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் கர்நாடகத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பர்கூரு என்னுமிடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினார். இவர் கி.பி. 1339 இல் அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி என்னும் இடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளை நிர்வகித்து வந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் தொடக்கத்தில், ஹொய்சாள அரசின் வடக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் . கி.பி. 1343 இல் ஹொய்சாள அரசன் மூன்றாவது வீர வல்லாளனின் மறைவைத் தொடர்ந்து ஹொய்சாளம் முழுவதையும் முதலாம் ஹரிஹரர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

இவர் காலத்துக் கன்னடக் கல்வெட்டுக்கள், இவரை, மிகுந்த அறிவும், திறமையும் கொண்டவன், எதிர் அரசர்களுக்குத் தீ போன்றவன், உறுதிமொழிகளைக் காப்பாற்றாத நிலப்பிரபுக்களைத் தண்டிப்பவன் எனப் பலவாறாகப் புகழகின்றன . முதலாம் ஹரிஹரரின் தம்பிகளுள், புக்கா ராயன் பேரரசருக்கு இரண்டாவது நிலையில் இருந்தான். கம்பண்ண என்பவன் நெல்லூர் பகுதியையும், முட்டப்பா முலபாகலு பகுதியையும், மாரப்பா சந்திர குட்டியையும் நிர்வாகம் செய்து வந்தனர்.

இவருடைய தொடக்கப் போர்கள் மூலம், துங்கபத்திரை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவிக் கொண்டார். பின்னர் இவருடைய கட்டுப்பாடு படிப்படியாக, கொங்கண், மலபார் கரையோரங்களிலுள்ள சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இக்காலத்தில், மதுரை சுல்தானுடன் நிகழ்ந்த போரில் ஹொய்சாளத்தின் கடைசி அரசன் மூன்றாவது வீர வல்லாளன் இறந்தான். இந்த வெற்றிடம் அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு முதலாம் ஹரிஹரருக்கு வாய்ப்பாக அமைந்தது. முழு ஹொய்சாள அரசும் முதலாம் ஹரிஹரரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது.

முதலாவது புக்கா ராயன்

முதலாவது புக்கா ராயன் விஜயநகரப் பேரரசின் இரண்டாவது பேரரசன் ஆவான். இவன் கி.பி. 1356ம் ஆண்டு முதல் கி.பி.1377ம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசை ஆட்சிபுரிந்தான். தனது தமையனான முதலாம் ஹரிஹரருடன் சேர்ந்து விஜயநகரப் பேரரசை நிறுவியதில் இவனுக்குப் பெரும் பங்கு உண்டு. முதலாம் ஹரிஹரரின் ஆட்சிக்காலத்தில் அரசருக்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் இருந்த புக்கா, முதலாம் ஹரிஹரரின் மறைவுக்குப் பின்னர் மன்னனாகப் பதவியேற்றான். இவன் சங்கம மரபைச் சேர்ந்தவன். இவனுடைய தொடக்ககால வாழ்க்கை பற்றி அதிகம் தெளிவில்லை. முதலாம் ஹரிஹரரும், புக்கா ராயனும் விஜயநகரப் பேரரசை நிறுவியதிலும், பின்னர் பெற்ற போர் வெற்றிகள் மூலமும் பெரும் புகழ் பெற்றனர்.

புக்கா ராயனின் இருபத்தோரு ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் எல்லைகள் தொடர்ந்து விரிவடைந்து சென்றன. இவன் தென்னிந்தியாவின் பல அரசுகளைத் தோற்கடித்து அங்கெல்லாம் தனது கட்டுப்பாட்டை நிறுவினான். ஆற்காட்டுச் சம்புவரையரும், கொண்டவிடு ரெட்டிகளும் கி.பி. 1360 இல் புக்கா ராயனிடம் தோற்றனர். கி.பி. 1371 இல் மதுரையில் இருந்த சுல்தானகத்தைத் தோற்கடித்துப் விஜயநகரப் பேரரசின் எல்லைகளை தெற்கே இராமேஸ்வரம் வரை விரிவாக்கினான். புக்கா ராயனின் மகனான குமார கம்பண்ணனும் இவனது படையெடுப்புக்களில் கலந்து கொண்டது பற்றி, இவனது மனைவியான கங்காம்பிகாவினால் எழுதப்பட்ட மதுரா விஜயம் என்னும் சமஸ்கிருத நூலில் விளக்கப்பட்டுள்ளது. கி.பி.1374 ஆம் ஆண்டளவில், பஹ்மானிகளுக்கு எதிராக துங்கபத்திரை – கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலத்தின் கட்டுப்பாடு தொடர்பில் இவனது பலம் அதிகரித்தது. இவன் கோவா, ஒரிஸ்ஸா ஆகிய அரசுகளையும் கைப்பற்றினான். இலங்கையில் யாழ்ப்பாண அரசு மற்றும் மலபார் அரசுகளிடமிருந்து திறையும் பெற்றான்.

புக்காவின் ஆட்சிக்காலத்தில், இவன் பஹ்மானி சுல்தான்களுடனும் மோதியுள்ளான். முதல் தடவை முதலாவது முஹம்மத்தின் காலத்திலும், பின்னர் முஜாஹித்தின் காலத்திலும் மோதல்கள் நிகழ்ந்தன. இவன் சீனாவுக்கும் தூதுவர்களை அனுப்பியதாகத் தெரிகிறது. புக்கா கி.பி. 1380 ஆம் ஆண்டளவில் காலமானான். இவனைத் தொடர்ந்து இரண்டாம் ஹரிஹர ராயன் ஆட்சிக்கு வந்தான். புக்காவின் காலத்திலேயே விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விஜயநகரம் ஆகியது. துங்கபத்திரையின் தென்கரையில் விஜயநகரம் அமைந்துள்ளது. பல இக்கியங்களும், சமய நூல்களும் இவன் காலத்தில் ஆக்கப்பட்டன. பல அறிஞர்கள், வித்தியாரண்யர், சாயனர் ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் இருந்து வந்தனர். வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யகங்கள் முதலிய இந்து நூல்களுக்கான சாயனருடைய உரைகள், புக்காவின் ஆதரவிலேயே எழுதப்பட்டன.

இரண்டாம் ஹரிஹர ராயன்

இரண்டாம் ஹரிஹர ராயன் விஜயநகரப் பேரரசை ஆண்ட பேரரசர்களில் ஒருவன். இவன் கி.பி. 1377ம் ஆண்டு முதல் கி.பி.1404ம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசை ஆட்சிபுரிந்தான். இவன் அப் பேரரசின் மூன்றாவது அரசனாவான். விஜயநகரத்தின் முதல் அரச மரபான சங்கம மரபைச் சேர்ந்தவன். விஜயநகரப் பேரரசை உருவாக்கிய சகோதரர்களில் இளையவனான புக்கா ராயன் இறந்த பின்னர் இரண்டாம் ஹரிஹரன் ஆட்சிக்கு வந்தான். இரண்டாம் ஹரிஹர ராயனும் தனது ஆட்சிக்காலத்தில், தனது நாட்டின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்தான். நெல்லூருக்கும் கலிங்கத்துக்கும் இடைப்பட்ட ஆந்திராவின் கரையோரப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்காகக் கொண்டவிடு ரெட்டிகளுடன் போரிட்டான். இரண்டாம் ஹரிஹர ராயன் அவர்களிடமிருந்து, அட்டாங்கி, ஸ்ரீசைலம் ஆகிய பகுதிகளையும், கிருஷ்ணா ஆற்றுக்குத் தெற்கே குடாநாட்டுப் பகுதியிலிருந்த பெரும்பாலான நிலப்பரப்பையும் கைப்பற்றிக் கொண்டான். கி.பி.1378 இல் முஜாஹித் பஹ்மானி இறந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, வடமேற்குப் பக்கமாகத் தனது கட்டுப்பாட்டை விரிவாக்கிய இரண்டாம் ஹரிஹர ராயன், கோவா, சாவுல் , டாபோல் ஆகிய துறைமுகப்பகுதிகளைக் கைப்பற்றினான். இன்று ஹம்பி என்று பரவலாக அறியப்படும் முந்தைய விஜயநகர அழிபாட்டுப் பகுதியில் இரண்டாம் ஹரிஹர ராயனுடைய அரண்மனை என்று நம்பப்படும் கட்டிடத்தின் அழிபாடுகளையும் காணலாம்.

விருபக்ஷ ராயன்

இரண்டாம் ஹரிஹர ராயனுக்குப் பின்னர் சங்கம மரபைச் சேர்ந்த விருபாட்ச ராயன் மன்னனாகப் பதவியேற்றான். விருபக்ஷ ராயன்கி.பி. 1404ம் ஆண்டு முதல் கி.பி.1405ம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசை ஆட்சிபுரிந்தான். பேரரசனாக இருந்த இரண்டாம் ஹரிஹரன் இறந்த பின்னர், விஜயநகரத்தின் அரசுரிமைக்காக அவனுடைய மகன்களான முதலாம் தேவ ராயன், இரண்டாம் புக்கா ராயன், விருபக்ஷ ராயன் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. முடிவில் விருபக்ஷ ராயன் அரசனானான் எனினும், இவனால் நீண்ட காலம் அரசாள முடியவில்லை. சில மாதங்களிலேயே அவன் கொலை செய்யப்பட்டான். விருபக்ஷ ராயன் காலத்தில், கோவா, சாவுல், டாபோல் உள்ளிட்ட ஏராமான நிலப்பரப்பை விஜயநகரம் இழந்துவிட்டதாக வெளிநாட்டுப் பயணி பெர்னாவோ நூனிஸ் அவரின் நூலில் குறிப்பிட்டுள்ளார். தெரிகிறது. மேலும் விருபக்ஷ ராயன் கொடூரமானவனாக இருந்ததாகவும், எதைப் பற்றியும் கவலைப்படாது பெண்களுடனும், குடியிலுமே காலத்தைக் கழித்ததாகவும் வெளிநாட்டுப் பயணி பெர்னாவோ நூனிஸ் எழுதியுள்ளார்.

இரண்டாம் புக்கா ராயன்

இரண்டாம் புக்கா ராயன் விஜயநகரப் பேரரசின் ஐந்தாவது பேரரசனாவான். இரண்டாம் புக்கா ராயன் கி.பி. 1405ம் ஆண்டு முதல் கி.பி.1406ம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசை ஆட்சிபுரிந்தான். இவன் சங்கம மரபைச் சார்ந்தவன். இவன் இப் பேரரசின் மூன்றாவது அரசனான இரண்டாம் ஹரிஹர ராயனின் மகனாவான். தந்தை இறந்ததும் அரசுரிமைக்காக இவனும் போட்டியிட்டான் எனினும், விருபக்ஷ ராயனே அரியணை ஏறினான். சில மாதங்களிலேயே விருபக்ஷ ராயன் தனது சொந்த மகன்களாலேயே கொல்லப்பட இரண்டாம் புக்கா ராயன் அரசனானான். இவனும் முன்னவனைப் போலவே குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்யமுடிந்தது. முடிசூட்டிக்கொண்ட சில மாதங்களிலேயே இவனது இன்னொரு சகோதரனான முதலாம் தேவ ராயனால் பதவியில் இருந்து நீக்கப்பட்டான்.

முதலாம் தேவ ராயன்

முதலாம் தேவ ராயன் விஜயநகரப் பேரரசின் ஆறாவது பேரரசனாவான். முதலாம் தேவ ராயன் கி.பி. 1406ம் ஆண்டு முதல் கி.பி.1422ம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசை ஆட்சிபுரிந்தான்.

முதலாம் தேவ ராயன், பேரரசன் இரண்டாம் ஹரிஹர ராயனின் மகனாவான். தந்தைக்குப் பின் ஒருவர்பின் ஒருவராக முடிசூட்டிக்கொண்ட இவனது சகோதரர் இருவரும் சிலமாதங்களே பதவியில் இருக்க முடிந்தது. இதனால் மூன்றாவதாக முதலாம் தேவ ராயன் அரசனானான். முதலாம் தேவ ராயன் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். பாரசீக நாட்டைச் சேர்ந்த ஃபெரிஷ்டா என்பவன், முதலாம் தேவராயன் பற்றி எழுதியுள்ளான். இதன்படி, தேவ ராயன், ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள முடுகல் என்னும் இடத்தைச் சேர்ந்த அழகிய பெண்ணொருத்தியுடன் காதல் வயப்பட்டதாகவும், இ தொடர்பு பஹ்மானி சுல்தான்களுடன் போருக்கு வித்திட்டு இறுதியில் தேவ ராயன் தோற்கடிக்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இக் கதைக்கு வரலாற்றாளர்கள் அதிகம் மதிப்புக் கொடுப்பதில்லை.
முதலாம் தேவ ராயன் ஆட்சிக்காலம் முழுவதும், தொடர்ச்சியான போர்கள் நடைபெற்றது. இப் போர்கள் தெலுங்கானாவின் வேளமாக்களுடனும், குல்பர்காவின் பஹ்மானி சுல்தானுடனும், கொண்டவிடு ரெட்டிகளுடனும், கலிங்கத்தின் கஜபதிகளுடனும் நடைபெற்றன. முதலாம் தேவ ராயன் காலத்தில் தலைநகரமான விஜயநகரம் 60 மைல்கள் விட்டமுள்ளதாக இருந்ததாக ஐரோப்பியப் பயணியாகிய நிக்காலோ காண்ட்டி என்பவர் விவரித்துள்ளார்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *