கிருஷ்ணதேவராயர்

கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் பேரரசர்களிலே மிகவும் புகழ் பெற்றவர் ஆவார். கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலமே விஜயநகரப் பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகும். இவர், கன்னட மற்றும் தெலுங்கு மக்களிடையே பெரும் வீரனாக மதிக்கப்படுவதுடன், இந்தியாவின் பெருமைமிகு அரசர்களில் ஒருவரும் ஆவார். கிருஷ்ணதேவராயர், ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ராம ரமணன் என்றும் அழைக்கப்பட்டார். கிருஷ்ணதேவராயரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் போர்த்துகீசியப் பயணிகளான, டொமிங்கோ பயஸ், பெர்னாவோ நுனிஸ் ஆகியோர் எழுதிய நூல்களின் எழுத்துக்கள் மூலமாகவே கிடைத்துள்ளன. கிருஷ்ணதேவராயர் துளுவ வம்சத்தை சேர்ந்த பேரரசர் ஆவார்

கிருஷ்ணதேவராயரின் தமையனான வீரநரசிம்ம ராயன் இறக்கும் தறுவாயில் இருந்தபோது, தனது அமைச்சனான சாளுவ திம்மராசன் என்பவனை அழைத்து, தனது எட்டுவயது மகனுக்கு அரசுரிமை கிடைக்கும் பொருட்டுத் தனது தம்பியாகிய கிருஷ்ண தேவ ராயனின் கண்களைப் பிடுங்கிவிடுமாறு கூறினானாம். திம்மராசன் அவ்வாறு செய்யாது, இரண்டு ஆட்டுக் கண்களைக் கொண்டுவந்து காட்டி, கிருஷ்ண தேவ ராயன் இறந்துவிட்டதாகக் கூறினானாம். எனினும் இரண்டு தாய்மாருக்குப் பிறந்த இந்த இரண்டு சகோதரர்களிடையே நட்புறவே நிலவியதாகத் தெரிகிறது.

வீரநரசிம்ம ராயன் இறந்த பின் கிருஷ்ணதேவராயருக்குப் பேரரச பதவி கிட்டியது. அத்துடன், கிருஷ்ண தேவ ராயனின் முடிசூட்டு விழாவும் சுமுகமாகவே நடைபெற்றது. கிருஷ்ணதேவராயரின் முடிசூட்டுவிழா கிருஷ்ணனின் பிறந்தநாளில் நடைபெற்றது. திறமை வாய்ந்த முதன் மந்திரியாகிய திம்மராசன், கிருஷ்ணதேவராயருக்குப் பேரரசின் நிர்வாகத்தில் பெரும் உதவியாக இருந்தார். கிருஷ்ணதேவராயரை ஆட்சிபீடம் ஏற்றியதில் பெரும் பங்கு திம்மராசனையே சாரும். கிருஷ்ணதேவராயரின் மிகமுந்திய கல்வெட்டு 26 ஜூலை 1509 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர், விஜயநகரத்துக்கு அருகில் தனது தாயின் நினைவாக அவரது பெயரால், நாகலபுரம் என்னும் புறநகர்ப் பகுதியைக் கட்டினார்.

கிருஷ்ணதேவராயரைப் பற்றி போர்த்துகீசியப் பயணிகள் எழுதிய நூல்களில் இருந்து கிருஷ்ணதேவராயரின் உருவம் பற்றிய தகவல்களைப் பெற முடிகிறது. கிருஷ்ணதேவராயர் நடுத்தர உயரம் உடையவராக இருந்தார் என்றும், மகிழ்ச்சியான பண்புகளைக் கொண்டிருந்தார் என்றும் அறியப் படுகிறது. இவர் வெளிநாட்டு விருந்தினரை மதித்தார், சட்டத்தைப் பேணுவதில் கடுமையாக இருந்த இவர், அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற் தகுதியை உயர்ந்த நிலையில் வைத்திருந்தார். கிருஷ்ணதேவராயர் ஒரு சிறந்த நிர்வாகியாக மட்டுமன்றிச் சிறந்த படைத் தளபதியாகவும் விளங்கினார். கிருஷ்ணதேவராயர் தானே படைகளை முன்னின்று நடத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குத் தானே உதவும் பண்பும் அவரிடத்திற் காணப்பட்டது.

விஜயநகரப் படைகள் சென்ற இடமெல்லாம் வெற்றியைக் குவித்த, கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம், அப் பேரரசின் வரலாற்றில் பெருமைக்குரிய பகுதியாகும். சமயங்களில், கிருஷ்ணதேவராயர், போர்த் திட்டங்களைச் சடுதியாக மாற்றியமைப்பதன் மூலம், தோல்விகளை வெற்றிகளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரது ஆட்சிக்காலத்தின் முதற் பத்தாண்டுகள் நீண்ட முற்றுகைகளும், படை நடவடிக்கைகளும், வெற்றிகளும் கொண்டதாக இருந்தது.

விஜயநகரப் பேரரசின் முக்கிய எதிரிகளாக விளங்கிய ஒரிசாவின் கஜபதிகள், ஐந்து துண்டாகப் பிரிந்து விட்டாலும் தொடர்ந்தும் விஜயநகரப் பேரரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்தனர். மேலும் பாமினி சுல்தான்கள், வளர்ந்துவரும் கடல் வல்லரசாக இருந்துகொண்டு, கடல் வணிகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போர்த்துகீசியர்கள் ஆகியோர் விஜயநகரபி பேரரசிற்கு முக்கிய எதிரிகளாக விளங்கினர். உம்மாத்தூர்த் தலைவர்கள், கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரும் இடையிடையே விஜயநகரபி பேரரசிற்கு எதிராகக் கிளர்ச்சில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் தக்காணத்துச் சுல்தான்களின் படையெடுப்புகள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டன. 1509 ஆம் ஆண்டில், கிருஷ்ணதேவராயரின் படைகள், பீஜப்பூர் சுல்தானுடன் சண்டையில் ஈடுபட்டுச் சுல்தானைக் கடுமையாகக் காயப்படுத்தி அவனைத் தோற்கடித்தன. போரில் யூசுப் ஆதில் கான் கொல்லப்பட்டான். கோல்கொண்டா விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இந்த வெற்றியையும், பாமினி சுல்தான்களின் ஒற்றுமை இன்மையையும் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணதேவராயர், பிதார், குல்பர்கா, பீஜப்பூர் ஆகியவப் பிரதேசங்களையும் கைப்பற்றினார். இச் சண்டையில் பிடிபட்ட சுல்தான் மஹ்மூதைப் பின்னர் விடுவித்துவிட்டார்.

கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் ஆகியோர் உள்ளூரில் விஜயநகரப் பேரரசிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிருஷ்ணதேவராயர் இவர்கள் அனைவரையும் அடக்கினார். மேலும் கிருஷ்ணா ஆறு வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி இறந்தான். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயர் கோதாவரி ஆற்றுக்கு அப்பாலும் சென்றார்.

கிருஷ்ணதேவராயர் வைணவராக இருந்தபோதிலும் அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ஆந்திரபோஜர் என்று அவர் அழைக்கப்பட்டார்.

அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர். அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார். அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும் சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர். ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம், உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.

தென்னிந்தியாவில் பெரும்பாலான கோயில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் எனற புதிய நகரை நிர்மாணித்தார். மேலும் ஏராளமான ராயகோபுரங்களையும் அவர் கட்டுவித்தார்.

விஜயநகரப் பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. ஸ்தலம் என்பது பல கிராமங்களைக் கொண்டிருந்த பிரிவாகும். மண்டலத்தின் அளுநர் மண்டலேஸ்வரர் அல்லது நாயக் என்று அழைக்கப்பட்டார். விஜய நகர ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியில் முழு அதிகாரங்களை வழங்கியிருந்தனர்.

நிலவரி தவிர, திறைகள், பரிசுகள் ஆகியவற்றை சிற்றரசர்களும் படைத்தவைர்களும் அவ்வப்போது பேரரசுக்கு அனுப்பி வந்தனர். துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம் பல்வேறு தொழிலாளர்கள் மீதான வரிகள் ஆகியவையும் அரசாங்கத்தின் வருவாயாக இருந்தன. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. அரசரின் தனிப்பட்ட செலவுகள், அவர் அளிக்கும் கொடைகள், ராணுவத்திற்கான செலவுகள் போன்றவை அரசின் முக்கிய செலவினங்களாகும். நீதித்துறையைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளை சிதைத்தல், யானைக்காலால் இடறுதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன.

விஜய நகர ராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு முக்கிய பிரிவுகளை அது கொண்டிருந்தது. அயல்நாட்டு வணிகரிடமிருந்து உயர்ரக குதிரைகள் ராணுவத்திற்காக வாங்கப்பட்டன. ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்று அழைக்கபட்டனர். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்கள் அமரம் என்று அழைக்கப்பட்டது. படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *