விஜயநகரப் பேரரசு – பகுதி 2

ராமச்சந்திர ராயன்

ராமச்சந்திர ராயன் விஜயநகரப் பேரரசின் ஏழாவது பேரரசனாவான். இவன் கி.பி. 1422ம் ஆண்டு முதல் கி.பி.1422 ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். சங்கம மரபைச் சேர்ந்த இவன், தனது தந்தையான முதலாம் தேவ ராயனின் மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினான். முடிசூட்டிக் கொண்ட அதே ஆண்டிலேயே அவனது ஆட்சி முடிவுற்றது. குறுகிய காலமே ராமச்சந்திர ராயன் ஆட்சியில் இருந்ததால் இவனைப் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. ராமச்சந்திர ராயனைத் தொடர்ந்து அவனது தம்பியான வீரவிஜய புக்கா ராயன் ஆட்சிக்கு வந்தான்.

வீரவிஜய புக்கா ராயன்

வீரவிஜய புக்கா ராயன் விஜயநகரப் பேரரசின் எட்டாவது பேரரசன். இவன் கி.பி. 1422ம் ஆண்டு முதல் கி.பி.1424 ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். சங்கம மரபைச் சேர்ந்த இவன், பேரரசன் முதலாம் தேவ ராயனின் மகன். இவனும் குறுகிய காலமே மன்னனாகப் பதவிவகித்தான். போத்துக்கீசப் பயணி நூனிஸ், இவன் ஆறு ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிட்டிருப்பினும், 1424 ஆம் ஆண்டிலேயே இவனது ஆட்சி முடிவடைந்துவிட்டது. இவனைத் தொடர்ந்து இவனது மகனான இரண்டாம் தேவ ராயன் ஆட்சிபீடம் ஏறினான்.

இரண்டாம் தேவ ராயன்

இரண்டாம் தேவ ராயன் விஜயநகரப் பேரரசின் ஒன்பதாவது பேரரசன். இவன் கி.பி. 1424ம் ஆண்டு முதல் கி.பி.1446 ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். சங்கம மரபைச் சேர்ந்தவன். இம் மரபில் வந்த அரசர்களுள் மிகச் சிறந்தவன் இவன் என்று கூறலாம் . இரண்டாம் தேவ ராயன், திறமையானவனாயும், வெற்றிகரமான பேரரசனுமாக விளங்கினான். 1432 இல் கொண்டவீடு கோட்டையைக் கைப்பற்றியதுடன், ராய்ச்சூர் ஆற்றுப் பகுதியில் சில பகுதிகளை இழந்தாலும், முதலாம் அஹ்மத் ஷாவின் படையெடுப்பை முறியடித்து முட்கல் (Mudgal) கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டான். ஒரிசாவின் கஜபதியை 1427, 1436, 1441 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை போரில் தோற்கடித்தான். சுல்தான் அலாவுதீனுக்கு எதிராகப் போரிட்டு, கேரளாவுக்குள்ளும் முன்னேறினான். அங்கே, கிலான் அரசனையும் பிற தலைவர்களையும் தோற்கடித்தான். இலங்கை மீதும் படையெடுத்துப் பெரும் பொருள் பெற்றான். கோழிக்கோட்டு அரசனும், பர்மாவின் பெகு, தனசெரிம் ஆகியவற்றின் அரசர்களிடமிருந்தும் கூடத் திறை பெற்றான். இத் தகவல்கள் நூனிஸின் எழுத்துக்களிலிருந்து தெரியவருகிறது.

பாரசீக நாட்டின் தூதுவனாக 1443 இல் தென்னிந்தியாவுக்கு வந்த அப்துல் ரசாக் என்பவன், இரண்டாம் தேவ ராயன், ஒரிசாவிலிருந்து மலபார் வரையும், இலங்கையிலிருந்து குல்பர்கா வரையும் பேரரசை விரிவாக்கியதுடன், தென்னிந்தியாவின் பல துறைமுகங்களையும் கைப்பற்றி இருந்ததாகக் குறிப்பிடுகின்றான். இருந்தும், பாமினி சுல்தானகம் தொடர்பில் எவ்வித தீர்வும் கிடைக்காமல், இரண்டாம் தேவராயனின் ஆட்சிக்காலம் முழுவதும் இரு அரசுகளுக்கு இடையிலும் பகைமை தொடர்ந்து நிலவியது. பாமினி அரசு மீதான படையெடுப்புக்கள் வெற்றியளிக்கவில்லை எனினும், 1426 ஆம் ஆண்டில் நிகழ்ந்த போருக்குப் பின்னர் பாமினி அரசன் தனது தலைநகரத்தை பிதாருக்கு மாற்றினான். இரண்டாம் தேவ ராயனின் ஆட்சிக்காலம் சங்கம மரபினரின் பொற்காலமகா விளங்கியது. இரண்டாம் தேவ ராயனுக்குப் பின்னர் மல்லிகார்ஜுன ராயன் அரசனானான்.

மல்லிகார்ஜுன ராயன்

மல்லிகார்ஜுன ராயன் விஜயநகரப் பேரரசின் பேரரசனாக கி.பி. 1446ம் ஆண்டு முதல் கி.பி.1465 ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். சங்கம மரபைச் சேர்ந்தவன். இவன் தனது தந்தையான இரண்டாம் தேவராயனின் மறைவுக்குப் பின் ஆட்சிபீடம் ஏறினான். இரண்டாம் தேவராயன் ஒரு திறமையான பேரரசனாக விளங்கினான். மல்லிகார்ஜுன ராயன் தனது தந்தையைப் போலன்றி திறமையற்றவனாகவும், ஊழல் நிறைந்தவனாகவும் இருந்தான்.

தொடக்கத்தில் பாமினி சுல்தானகம், ஒரிசாவின் அரசன் ஆகியோரின் தாக்குதல்களைச் சமாளித்துப் பேரரசைக் காத்துக்கொண்டான் எனினும், பின்னர் அவனுக்குத் தொடர்ச்சியான பல தோல்விகள் ஏற்பட்டன. கஜபதிகள், ராஜமுந்திரியை 1454 ஆம் ஆண்டிலும், உதயகிரியையும், சந்திரகிரியையும் 1463 இலும் கைப்பற்றிக் கொண்டனர். 1450 இல் பாமினி அரசுகள், பேரரசின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டு தலைநகரத்தையும் தாக்கினர்.மேலும் இந்த காலகட்டத்தில் போர்த்துகீசியர்கள் தென்னிந்தியாவுக்குள் நுழைந்தனர். மேற்குக் கரையில் விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல துறைமுகங்கள் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இந் நிகழ்வுகள் சங்கம மரபின் வீழ்ச்சிக்கு வித்திட்டன. 1465 ஆம் ஆண்டில் மல்லிகார்ஜுன ராயனின் ஒன்றுவிட்ட சகோதரனான இரண்டாம் விருபக்ஷ ராயன் ஆட்சியைக் கைப்பற்றினான்.

இரண்டாம் விருபக்ஷ ராயன்

இரண்டாம் விருபக்ஷ ராயன் விஜயநகரப் பேரரசை 20 ஆண்டுக் காலம் ஆட்சி செய்தவன். இவன் சங்கம மரபினன். இவன் கி.பி. 1465ம் ஆண்டு முதல் கி.பி.1485 ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். இவன், தனக்கு முன்னிருந்த மல்லிகார்ஜுன ராயனை ஆட்சியிலிருந்து அகற்றி அரசைக் கைப்பற்றினான். மல்லிகார்ஜுன ராயன் திறமையற்ற, ஊழல் மலிந்த அரசனாக இருந்ததுடன், பேரரசின் எதிரிகளுடன் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து வந்தான்.

தனது ஆட்சிக் காலம் முழுதும், குழப்பம் விளைவிக்கும் தலைவர்களையும் அதிகாரிகளையும் மட்டுமன்றி, பேரரசின் நிலையை உணர்ந்து அதன் பகுதிகளைக் கைப்பற்றத் துடிக்கும் பகை அரசர்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. 1470 ஆம் ஆண்டில் இவன் கொங்கணம் கரையோரப் பகுதிகளை பாமினி அரசிடம் இழந்தான். பாமினி சுல்தான் மூன்றாம் முஹம்மத் ஷா அனுப்பிய முதல் அமைச்சன் மஹமுத் கவான் கோவா உட்பட்ட இப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பாமினி சுல்தான், கிருஷ்ணா, துங்கபத்திரை ஆறுகளிடை நிலப்பகுதியையும் கைப்பற்றினான். ஒரிசாவின் அரசன் புருஷோத்தம கஜபதி, எல்லைக்குள் புகுந்து திருவண்ணாமலையைப் பிடித்தான். இத் தோல்விகள் இரண்டாம் விருபக்ஷ ராயனை மதிப்பு இழக்கச் செய்ததோடு, பேரரசின் பகுதிகள் பலவும் கிளர்ச்சியில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது. இந் நிலை, 1485ம் ஆண்டு இரண்டாம் விருபக்ஷ ராயன் தனது சொந்த மகனான பிரௌத ராயன் கையால் கொல்லப்பட்டு இறந்தான்.

பிரௌத தேவ ராயன்

இவன் பிரௌத ராயன் அல்லது பிரௌத தேவ ராயன் என்று அழைக்கப்பட்டான் . தந்தையாக கொன்று 1485ம் ஆண்டு விஜயநகரப் பேரரசின் ஆட்சிபீடம் ஏறியவன். ஆனால் மிகக் குறுகிய காலமே ஆட்சியில் இருக்க முடிந்தது. இரண்டாம் தேவ ராயனுக்குப் பின்னர், இவனுக்கு முன்னிருந்த இரண்டு அரசர்களும் பேரரசை ஆளுவதற்கான திறமை பெற்றிருக்கவில்லை. இதனால் உள்நாட்டிலும், வெளியிலிருந்தும் விஜயநகரப் பேரரசுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டன. விஜயநகரப் பேரரசு இந்தப் பிரச்சனைகளை சமாளிக்கும் வலுவிழந்து காணப்பட்டது. இந்நிலையில் பேரரசன் இரண்டாம் விருபக்ஷ ராயனின் மறைவைத் தொடர்ந்து அரசனான பிரௌத ராயன் மக்களால் மதிக்கப்படாத ஒரு அரசனாக இருந்தான். இந்நிலையில் சந்திரகிரிப் பகுதியில் ஆளுநராக இருந்த சாளுவ மரபைச் சேர்ந்த நரசிம்ம தேவ ராயன், துளுவ நரச நாயக்கன் என்பவனை விஜயநகரத்துக்கு அனுப்பி பிரௌத ராயனைப் பதவியில் இருந்து அகற்றினான். பிரௌத தேவ ராயனே விஜயநகரப் பேரரசை நிறுவிய சங்கம மரபின் கடைசி அரசனாவான்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *