சிதம்பரம் நடராஜர் கோயில் | Thillai Nataraja Temple, Chidambaram

சிதம்பரத்தில் அமைத்துள்ள நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜ் கோவில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இந்த சிவஸ்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

இந்தியாவில் சிவபெருமானுக்கு உள்ள புகழ்பெற்ற கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயில் பஞ்சப்பூத ஸ்தலங்களில் ஒன்றான ஆகாய ஸ்தலமாகும். இந்த கோவில் மிக நீண்ட புராண தொடர்பு உடையது. கோயிலின் கட்டிடக்கலை, ஆன்மீகத்திற்கும் கலைக்கும் இடையில் உள்ள தொடர்பை பிரதிபலிக்கிறது. இந்தக்கோயில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய சிதம்பரத்தில் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர்கள் தங்கள் குலதெய்வமாக சிதம்பரம் நடராஜர் கோயிலைக் கருதினர்.

சிதம்பரம் கோவில் தென் இந்தியாவில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஐந்து முக்கிய சபாக்கள் உள்ளன, அவை கனகா சபா, சித்த சபை, நிருட்டா சபா, தேவா சபா மற்றும் ராஜசா. இந்த ஸ்தலதில் உள்ள நடராஜர் உருவம், சிவனின் மிக முக்கியமான வடிவங்களில் ஒன்றாகும்.

இந்த ஸ்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

இந்த சிவஸ்தலதின் மூலவர் திருமூலநாதர் அல்லது பொன்னம்பலநாதா், உற்சவர் நடராஜா் அல்லது கனகசபைநாதா் என்றும் பெயர் பெற்று விளங்குகிறார்கள். தாயார் பெயர் உமையாம்பிகை அல்லது சிவகாமசுந்தரிஆகும். இந்த சிவஸ்தலதின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இந்த சிவஸ்தலம் திருநீலகண்ட நாயனார் அவதார ஸ்தலம் என்றும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இந்த சிவஸ்தலம் சோழர், பல்லவர், விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கோயில் கட்டமைப்பு

நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது இந்த ஆலயம். இவ்வாலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணமுடியும். மேலும் இங்கு மூலவர் சிலை இருக்கும், இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, முதலாம் பராந்தகன் சோழ மன்னனால் பொற்கூரை வேயப்பட்டது. அதனால் இந்தச் சபை பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது; வடமொழியில் கனகசபை எனக் கூறப்படுகிறது. சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந்தவை. பெரியகோவில் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.

ஆனந்த தாண்டவம்

ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது. வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது. இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணங்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது. இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்று விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது

சிதம்பர ரகசியம்

தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறுவார்கள்.

இது ‘திரஸ்க்ரிணீ’ என்கிற நீல வஸ்திரத் திரையால் மூடப்பட்டு இருக்கும். திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில் உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட ‘வில்வ தளமாலை’ ஒன்று தொங்கும் காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.

மூர்த்தி ஒன்றும் இல்லாமலேயே வில்வ தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில், முடிவும் முதலும் இல்லாது இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணரத்தான் முடியும் என்பதே சிதம்பர ரகசியம் ஆகும்.

வழிபாடு

திருவாரூர் தியாகராஜா் சுவாமியயை தவிர, உலகில் உள்ள அனைத்து சிவகலைகளும் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து காலையில் புறப்பட்டு, இரவில் மீண்டும் கோவிலை வந்தடைகின்றன என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக மற்ற சிவாலயங்களை விட தாமதமாக இக்கோவிலில் அர்த்த சாம பூசை நடைபெறுகிறது. இவ்வாறு அனைத்து சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்கு சிதம்பரத்தில் நடைபெறும் அர்த்தசாம பூசையில் கலந்து கொள்வது ஈடானதாகக் கருதப்படுகிறது.

ஆறு கால பூஜை

சிதம்பரம் நடராசருக்கு தினந்தோறும் ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன. ஆறு கால பூசையென்பது காலை சந்தி, இரண்டாங் காலம்,உச்சி காலம்,சாயங் காலம்,ரகசிய பூசை காலம், அர்த்த சாமம்

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது.

வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர்.

நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர்.

கல்வெட்டுகள்

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயரும் மற்றும் நாயக்க மன்னர்களும் கோயிலின் பிரகாரங்கள் சபை மண்டபங்கள் கட்டியதாகவும் பல்வேறு திருப்பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *