கபசுர குடிநீர் தயாரிப்பு முறை

கபசுர குடிநீர் தயாரிப்பு முறை

கபசுர குடிநீர் எவ்வாறு வீட்டிலேயே தயாரிக்கவேண்டும் என்பது குறித்து இம்ப்காப்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் கண்ணன் மற்றும் மருத்துவ அதிகாரி டாக்டர் கரு. கார்த்திகேயன் ஆகியோர் கூறியதாவது:-

தேவையான பொருட்கள்

சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக் சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 மூலிகைகளை தலா 35 கிராம் எடுத்து, முறைப்படி சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக இடித்து, நன்கு கலந்து வைக்கவேண்டும்.

மேலே சொன்ன மூலிகை பொடியில் 35 கிராம் குடிநீர் சூரணத்தை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சவும்.12 ல் ஒரு பங்கு ஆகும் வரை நீரை நன்கு காய்ச்சி எடுக்கவேண்டும். பிறகு காய்ச்சிய நீரை வடிகட்டிகொள்ளவும்.

கபசுர குடிநீரை 30 முதல் 60 மி.லி. வீதம், தினமும் 2 அல்லது 3 வேளைகள் கொடுக்கலாம். துணை மருந்தாக சாந்த சந்திரோதய மாத்திரை, கோரோசனை மாத்திரையும் கொடுக்கலாம். இதன் மூலம் கபசுரம் தீரும்.

காய்ச்சி வடிகட்டவேண்டும்

நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரணத்தை 10 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு 200 மி.லி. அளவு தண்ணீரில் இந்த குடிநீர் சூரணத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து நான்கில் ஒரு பங்காக வரும் வரை காய்ச்சி வடிகட்டி கசாயத்தை எடுத்துக்கொள்ளவும். 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மி.லி., 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி., 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 50 மி.லி. மட்டும் கொடுக்கவேண்டும்.

தற்காப்புக்காக 3 முதல் 5 நாட்கள் மட்டும் ஒரு நாளைக்கு 2 வேளை முதல் 3 வேளை வரை பருகலாம். நோய் வந்த பின்னர் டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும். வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. ஏதேனும் நோய் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி உணவு உண்ணுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அருந்தலாம்.

கபசுர குடிநீர் பயன்படுத்தும் முறை

குடிநீரை அப்போதைக்கு அப்போது மட்டும் புதிதாக செய்து பயன்படுத்தவேண்டும். குடிநீரை 3 மணி நேரத்துக்கு பின் பயன்படுத்தக்கூடாது. 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் முதல் 3 மாதங்களுக்கு குடிக்காமல் இருப்பது நல்லது. வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே குடிக்கவேண்டும்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *