சுவாமிமலை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.

முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்ததாகும். கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.

அமைவிடம்

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூர் நகரிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் அமைந்திருப்பது சுவாமி மலை. இந்து அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட இந்தக் கோயிலில், திருமண மண்டபங்களும் வசதியான தங்கும் விடுதிகளும் உள்ளன. குடும்பத்தோடு வரும் பக்தர்கள் தங்கிக் கொள்ள தேவஸ்தானம் சார்பில் ஏராளமான குடில்களும் உள்ளன. சோழ நாட்டையே ஒரு சிவத்தலமாகப் பாவித்து வழிபடும் முறை உண்டு. அந்த வகையில் திருவலஞ்சுழியை விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலையை முருகன் சன்னதியாகவும் கொள்வர். இத்தலத்தை முருகனின் சிறப்புமிக்க அழகிய படைவீடு என்ற பொருளில் (ஏர்+அகம்) ஏரகம் என்றனர். ஏர்த் தொழிலான விவசாயத்தில் சிறந்த பகுதியில் உள்ள அகம் என்ற பொருளையும் எடுத்துக் கொள்ளலாம். இக்கோயிலின் தல வரலாறு சுவாமிமலையில் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரணவ உபதேசம் கேட்ட சிவபெருமான்

படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன். ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், “பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்று முருகனிடம் கேட்டார். “ஓ நன்றாகத் தெரியுமே” என்றார் முருகன். “அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?” என்றார் ஈசன். “உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!” என்றார் முருகன்.

அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார். இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்பட்டது.

நான்கரை அடி உயர சுவாமிநாதன்

ஞானாசிரியராகிய சுவாமிநாதன் கம்பீரமாக நான்கரை அடி உயரமுள்ள திருவுருவத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலக்கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடக்கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்கக் கருணாமூர்த்தியாகக் காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதைக் கண்குளிரக் காணலாம். மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, இரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி அடியவர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம். நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் “தாத்ரி” என்பர். அதனால் சுவாமிமலையை “தாத்ரிகிரி” என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.

முருகனை போற்றிப் பாடல்கள்

அருணகிரிநாதர் முப்பத்தெட்டு திருப்புகழ்ப் பாடல்களை சுவாமிநாதனுக்குச் சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். “ஒருதரம் சரவணபவா…” என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, “சுவாமிநாத பரிபாலயாதுமாம்” என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

மாடக்கோயில்

சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும். இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில், நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.

மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன. சுவாமிநாதனைக் காண நாம் அறுபது படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் “கண் கொடுத்த கணபதி” என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.

பெயர்க்காரணம்

முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன்சுவாமி’ எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றோறு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால் இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.

தலபெருமை

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற, முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன், சிவனே முருகன். இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும்.

தல வரலாறு

300 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி குண்டுக்கரை முருகன் கோயிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது, இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்” என கூறி மறைந்தார். ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்

கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில்(சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்) ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016-ல் நடைபெற்றது. 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது. விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *