கேரளம் | Kerala

கேரளம் அல்லது கேரளா இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.

பெயர்க் காரணம்

கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான ‘சேரளம்’ மலைச் சரிவு அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் சேர நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா – “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும்.

சிறப்புகள்

ஆதி சங்கரர் (கி.பி.788-820) பிறந்த இடம் காலடி
இந்திய செவ்வியல் நடன வடிவம் “கதகளி”யின் பிறப்பிடம்
இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம்
இந்தியாவின் நறுமணத் தோட்டம்
களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம்
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம்
வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது.

புவியமைப்பு

38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள், மேற்கில் அரபிக் கடல், தென்கிழக்கில் தமிழ்நாடு, வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஆறுகள்

நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள்.

வரலாறு

பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை. இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர். போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது. மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது.

பொருளாதாரம்

விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

மொழி

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது.

கலைகள்

கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது.

சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்

சுற்றுலா தலங்கள்

1. தேக்கடி
2.பெரியார் தேசியப் பூங்கா
3.மூணார்
4.வயநாடு
5.ஆலப்புழாவின் கட்டு வள்ளம்
6.கொச்சி மற்றும் கொல்லம்

கேரளாவின் அற்புத மலைவாசஸ்தலமான மூணார் பிரதேசம் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. அதோடு வயநாடு மாவட்டத்துக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற தேன் நிலவு ஸ்தலமாக மூணார் மலைப்பிரதேசம் அறிப்படுகிறது. மேலும் கேரளாவில் வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட கண்கவர் மலைவாசஸ்தலங்கள் ஏராளம் நிறைந்து கிடக்கின்றன. இதில் தேக்கடி அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும் பயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி பார்த்தாலும் கேரளாவின் மலைவாசஸ்தலங்களின் மடியில் உற்சாகம் பொங்கும் சுற்றுலா அனுபவங்கள் எக்கச்சக்கம் காத்துக்கிடக்கின்றன.

ஆன்மிக தலங்கள்

சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும்.

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்:

1.திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம்
2.திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம்
3.திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம்
4.திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம்
5.திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம்
6.திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம்
7.திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம்
8.திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம்
9.திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம்
10.திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம்
11.திருநாவாய், மலப்புறம் மாவட்டம்

விழாக்கள்

ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *