கஜேந்திர வரதப் பெருமாள் கோயில், கபிஸ்தலம்

கஜேந்திர வரதப் பெருமாள் கோயில்

www.marvelmurugan.com

கஜேந்திர வரதப் பெருமாள் கோயில் (Gajendra Varadha Perumal Temple), தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோயிலாகும். இக்கோயில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று

தல வரலாறு

கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம்பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்க பட்டது. இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், ‘திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.

ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.

வழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே காப்பாற்று’ என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைக் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும். ஆஞ்சனேயருக்கும் அருள் அளித்த தலம் இந்த கபிஸ்தலம் (கபி-தலம்). இத்தலம் கவித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

தூய்மையான பக்தி கொண்டு வணங்குவோருக்கு இத்தலத்து பெருமாள் மோட்சம் அளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வலது கரத்தில் முத்திரையுடன் ஆதிமூல பெருமாள் பள்ளி கொண்ட திருக்கோலத்துடன் காட்சி அளிக்கிறார். நாபிக் கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருக் கிறார். பொற்றாமரை வல்லி தாயார், கனகவல்லி தாயார் உடனிருக்கின்றனர். இங்கு சக்கரத்தாழ்வார், நரசிம் மருக்கு தனி சன்னதிகள் உள்ளன. வருடந்தோறும் ஆடி மாதம் கஜேந்திர மோட்சம் உற்சவம் 3 நாட்கள் நடைபெறுகிறது.

பஞ்சகிருஷ்ண தலங்கள்

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு தலங்கள் திருக்கண்ணபுரம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

  1. லோகநாதப் பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி
  2. கஜேந்திரவரதர் கோயில், கபிஸ்தலம்
  3. நீலமேகபெருமாள் கோயில், திருக்கண்ணபுரம்
  4. பக்தவக்ஷலபெருமாள் கோயில், திருக்கண்ணமங்கை
  5. உலகளந்தபெருமாள் கோயில், திருக்கோவிலூர்

மங்களாசாசனம்

திருமழிசை ஆழ்வார் இத்தலம் குறித்து ஒரு பாசுரம் பாடியுள்ளார்.

பாசுரம்

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா
தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும்
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு.

விழாக்கள்

சித்திரை மாதம் உற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து, பகல்பத்து உற்சவம் நடைபெறும். காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

கருடன் மூலம் குறை தீர்க்கும் பகவான்

இங்கு உங்கள் மனதில் உள்ள குறைகளை எல்லாம் கொட்டினால், பகவான் கருடன் மூலம் பறந்து வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார். குறிப்பாக எதிரிகளிடம் சிக்கி உயிருக்கு பயந்து கொண் டிருப்பவர்கள் இத்தலத்து பெருமாளை வழிபட அவர் கஜேந்திர நாத னாக வந்து உங்களை காத்தருள்வார். ஏழ்மை நீங்காதவர்கள், சாபம் பெற்றவர்கள், தொடர் நஷ்டத்தை சந்திப்பவர்கள், தீராத நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை ஆராதனை உள்ளிட்ட எல்லா பூஜைகளும் செய்ய,குறைகள் பணி போல மறையும்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *