ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர்

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இக்கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது.

ஆதிசேஷனுக்கு பெருமாளே ஆச்சாரியராக அருளிய தலம், பிருகு முனிவரின் மகளாகத் தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவை மணந்த இடம், இந்திரனின் சாபம் நீக்கிய பூமி, வைணவ ஆலயங்களில் அக்னி தலமாகவும், குரு தலமாகவும் விளங்கும் கோயில், திவ்ய தேசங்களில் பதினோராவது தலம், தம்பதியரின் மனக்கசப்பு நீக்கும் கோயில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்.

மூலவர்

இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் என அழைக்கப்படுகிறார். கருவறையில் பெருமான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தமது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா மேல் எழ, பள்ளி கொண்ட தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து இடதுகையில் எழுத்தாணியும் ஏடும் கொண்டுள்ளதால் பெருமாளின் இத்தோற்றம் உலகுக்குப் படியளந்த பெருமாள் ஓய்வாகப் பள்ளிகொண்ட கோலம் என அழைக்கப்படுகிறது.

தாயார்

இக்கோவிலில் அரங்கனின் நாயகி, தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார்.

மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார்

இடரான வாக்கை யிருக்க முயலார் மடவார் மயக்கின் மயங்கார்
-கடவுளர்க்கு நாதனூ ராதரியார் நானெனதென்னார மலன் ஆதனூர் எந்தை யடியார்

பெயர்க் காரணம்

காமதேனு -ஆ
ஆதனூர் -ஆ/தன்/ஊர்
இத்தலத்தில் மகாவிஷ்ணுவை நோக்கி காமதேனு தவம் இருந்த்ததுதான் ஆதனூர் என்ற பெயர் வரக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆ+தன்+ஊர்= ஆதனூர். ‘ஆ’ எனும் காமதேனு தவமிருந்து தன் ஊராக ஏற்றதால், இத்தலம் ‘ஆதனூர்’ என வழங்கப்படுகிறது. இதற்குச் சான்றாக, கருவறையில் பெருமாளின் திருப்பாதத்தை வணங்கியபடி காமதேனுவும், அதன் கன்று நந்தினியும் காட்சி தருகின்றன.

3 நிலை ராஜகோபுரத்தையுடைய இக்கோவிலில் காமதேனுவுக்கும் காமதேனுவின் மகள் நந்தினிக்கும் பெருமாளின் சந்நிதியில் சிற்பங்கள் உள்ளன.

புராண வரலாறு

பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த பெருமாளை வந்து தரிசித்தார் பிருகு முனிவர். அவருக்கு மகாலட்சுமி மாலை ஒன்றை வழங்கினாள். அந்த மாலையை, பெருமாளை வழிபட்டு திரும்பிச் செல்லும் வழியில் வந்த இந்திரனுக்கு பிருகு முனிவர் பரிசளித்தார். மாலையைப் பெற்றுக்கொண்ட இந்திரன், அதை ஐராவத யானையின் மீது வைத்தான். ஆனால் யானையோ, அதனை கீழே தள்ளி காலால் மிதித்தது. இதற்கு காரணமான இந்திரன் மீது கோபம் கொண்ட பிருகு முனிவர், அவனை மானிடனாகப் பூமியில் பிறக்க சாபமிட்டார்.

முனிவரின் சாபத்தால் கலங்கிய இந்திரன், மகாலட்சுமியிடம் சென்று வேண்டினான். அதற்கு மகாலட்சுமி, ‘நான் பிருகு முனிவரின் மகளாகப் பிறந்து, பெருமாளை மணம் புரியும் போது, உனது சாபம் நீங்கும்’ என்று அருளினாள். அதன்படியே, அனைத்தும் நடக்க, பெருமாள், மகாலட்சுமியின் திருமணக்கோலம் கண்டு, சாபவிமோசனம் பெற்றான் என புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. மகாலட்சுமி, மகாவிஷ்ணுவை மணம் புரிந்த தலம் இதுவாகும்.

தல வரலாறு

ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீரங்கனுக்கு திருமதில் எழுப்பும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார் திருமங்கையாழ்வார். அப்போது அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. தன் குறை நீங்கி பணி நிறைவு பெற உதவிடுமாறு, ஸ்ரீரங்கநாதனிடம் முறையிட்டார். அன்று அவரின் கனவில்தோன்றிய பெருமாள், ‘கொள்ளிடக்கரையில் வந்து தேவையான பொருளைப் பெற்றுக் கொள்’ என்று கூறினார்.

அதன்படி, கொள்ளிடக்கரை வந்த திருமங்கையாழ்வார், ஒரு வணிகரைச் சந்தித்தார். அந்த வணிகர், ‘உங்களுக்கு உதவி செய்ய எனக்கு கட்டளை வந்துள்ளது. நான் உங்களோடு வருகிறேன். வேலையாட்களுக்கு என்னிடம் உள்ள மரக்காலால் மண்ணை அளந்து தருவேன். உண்மையாக உழைத்தவர்களுக்கு அது பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு மண்ணாகவும் இருக்கும்’ என்று கூறினார்.

அந்த வணிகரிடம் ஒரு மரக்கால், ஏடு, எழுத்தாணி ஆகிய மூன்று பொருட்கள் இருந்தன.

ஸ்ரீரங்கத்தில் திருப்பணி செய்த வேலையாட்களுக்கு மரக்காலால் வணிகர் மணலை அளந்து தர, அது ஒருசிலருக்குப் பொன்னாகவும், சிலருக்கு மணலாகவும் இருந்தது. மணலை கூலியாகப் பெற்றவர்கள் வணிகரை அடிக்க முற்பட்டனர். வணிகர் ஓட, அவர் பின்னால் ஆழ்வாரும் ஓட, இருவரும் கொள்ளிடம் கரையில் உள்ள ஆதனூர் வந்து சேர்ந்தனர். அங்கே வணிகர், பெருமாளாக காட்சியளித்து மறைந்தார். இத்தலமே, இன்றைய ஆதனூர் என தலவரலாறு குறிப்பிடுகிறது.

பொது தகவல்

இத்தல இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பிரணவ விமானம் எனப்படும். இங்குள்ள ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் இருக்கிறது. மகாவிஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் ஆதனூர்(ஆ, தன், ஊர்) என்று பெயர் பெற்றது. கருவறை விமானத்தில் 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணுவின் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை பல்லாண்டுகளாக வளர்ந்து வருவதாக சொல்கிறார்கள்.

ஆண்டளக்கும் ஐயன்

தன்னை நாடி வருவோரின் தகுதிக்கேற்ப, அளந்து அருள் வழங்கும் வள்ளலாக வீற்றிருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘ஆண்டளக்கும் ஐயன்’ என்பதே திருநாமமாக விளங்குகிறது.

ஆதிசேஷன் பாம்பணையில் சயனித்த கோலத்தில் அருள்கிறார். பெருமாள் தன்னுடைய தலைக்கு மரக்காலை தலையணையாகவும், இடது கரத்தில் எழுத்தாணியையும், ஏட்டையும் தாங்கி காட்சி தருகிறார். ஆதிசேஷன் சங்கு, சக்கரத்தை தாங்கியிருப்பது சிறப்புக்குரியதாகும்.

இறைவனின் நாபிக் கமலத்தில் பிரம்மா, பாதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருக்க, பாதத்தை வணங்கியபடி காமதேனு, அதன் கன்று நந்தினி, பிருகு மகரிஷி, அக்னி பகவான், திருமங்கையாழ்வார் உள்ளிட்டோர் காட்சி தருகின்றனர்.

சுவாமி சன்னிதியின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் கமலவாசினித் தாயார் காட்சியளிக்கிறார். தாயார் பார்கவியாக எழுந்தருளியுள்ளார். தல மரம் பாடலி மரம், தலத் தீர்த்தமாக சூரிய புஷ்கரணி எனும் சூரியத் தீர்த்தம் அமைந்துள்ளது.

இத்தலத்தைக் காமதேனு தன் கன்றுடன் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளது. அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டுள்ளார். இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் அக்னியாகவும், நவக்கிரக தலத்தில் குரு தலமாகவும் விளங்குகின்றது. மன முறிவு ஏற்பட்ட தம்பதியினர் இங்கு வந்து பிரார்த்தனை செய்துகொண்டால், மன ஒற்றுமை ஏற்பட்டு மன மகிழ்வுடன் வாழ்வார்கள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆலயத்தில் வைணவ விழாக்கள் அனைத்தும் நடைபெறுகின்றன. வைகாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம், விசாகத்தன்று தேர்த் திருவிழா போன்றவையும் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அருகே நரசிங்கபுரம் தலத்தில் அகோபில மடத்தின் சார்பான நரசிம்மர் சன்னிதியும், அதன் வளாகத்தில் அமைந்துள்ள ஐந்து ஜீயர்களின் பிருந்தாவனத்தையும் அனுமதி பெற்று தரிசிக்கலாம்.

அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மோட்சம் தரும் தூண்கள்

பரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது. இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும்,திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.

கணக்கு எழுதும் பெருமாள்

சுவாமிமலை அருகே திருஆதனூர் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணியுடன் காணப்படுகிறார். இவர் கணக்கு எழுதும் பெருமாள், ஆண்டளக்கும் ஐயன், படியளக்கும் பரந்தாமன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்

திருவிழா

வைகாசியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.

பிரார்த்தனை

இங்கு வேண்டிக்கொண்டால் கல்வியில் சிறக்கலாம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை

நேர்த்திக்கடன்

சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ நைவேத்யம் படைத்து வழிபடலாம்

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில், ஆதனூர் திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம்- திருவைகாவூர் வழித்தடத்தில், கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், சுவாமிமலையில் இருந்து வடக்கே 4 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து பஸ் வசதி இருக்கிறது.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *