ஆர்க்டிக் நரி (Arctic fox, Vulpes lagopus) என்பது புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு நரியினம். இது வெள்ளை நரி, பனி நரி, துருவ நரி போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இந்நரி ஆர்க்டிக் துந்த்ரா உயிர்ச்சூழல் முழுவதும் காணப்படுகிறது.
ஆர்க்டிக் நரியானது கடுமையான ஆர்க்டிக் பனிப்பகுதிகளில் வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளது. இதன் ரோமம் அடர்த்தியாகவும் கால்களில் மயிர்க்கற்றைகள் அடர்ந்தும் உள்ளது. இதன் குறுகிய மொத்தமான காதுகள் பனியின் கடுமையைக் குறைக்கின்றன. பனிக்காலங்களில் இதன் நிறம் பனியையொத்து வெள்ளையாகவும் வெயிற்காலத்தில் இது பழுப்பாகவும் காணப்படும்.
உணவு
பனி நரியானது அகப்படும் சிறிய உயிரினங்களான லெம்மிங்குகள், முயல், ஆந்தை, முட்டைகள் போன்றவற்றை உண்ணும். லெம்மிங்குகளே இவற்றின் முதன்மையான உணவு. இவை பனிக்கு அடியில் இருக்கும் நீரில் வாழும் மீன்களையும் உண்ணும்.