துடுப்பு வால் கரிச்சான் (greater racket-tailed drongo) என்பது நடுத்தர அளவிலான ஒரு ஆசிய பறவை ஆகும். இது நீண்ட துடுப்பு போன்ற வாலைக் கொண்டுள்ளதால் இப்பெயரைப் பெற்றது. இவை பெரும்பாலும் மலையை ஒட்டிள்ள காடுகளில் காணப்படும். இவை எப்போதும் சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்கக்கூடியன. மேலும் இது ராஜாளி, வல்லூறு போன்ற பறவைகளைப் போல ஒலியெழுப்பும் ஒப்புப்போலிப் பண்பையும் கொண்டது. இது பூச்சிகளை வேட்டையாடி உண்பதால், இயற்கை பூச்சிக் கட்டுப்படுத்தியாக வேளாண்மைக்கு உதவுகிறது.
விளக்கம்
இது பெரும்பாலும் ஆசியாவில் காணப்படுகிறது. இது துடுப்புபோன்ற தனித்துவமான வலைக் கொண்டுள்ளது. இதன் முன் தலையில் அலகுக்கு அருகில் கிரிடம் போன்று இறகுகள் தூக்கலாக காணப்படும். இப்பறவைகளில் ஆண், பெண் என இரு பறவைகளும் பார்ப்பதற்கு ஒன்று போலவே காணப்படுகின்றன. தென்னிந்தியாவில், முக்கியமாக மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டிய காடுகளில் காணப்படுகின்றன.
நடத்தை
இவை பூச்சிகளையும், பூந்தேனையும், பழங்களையும் உண்ணக்கூடியது இதன் கால்கள் மிகவும் சிறியவை என்பதால், எப்போதும் மரத்தின் உச்சியில் இருக்கும் சிறிய கிளையில் அமர்ந்து இருக்கும். துணிவு மிக்கப்பறவையான இது தன் எல்லைக்குள் வரும் பறவைகளை கொத்தி விரட்டும்.