மஞ்சள் தொண்டை சின்னான் (yellow-throated bulbul (Pycnonotus xantholaemus) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச்சேர்ந்த, பேசரின் பறவை ஆகும். இவை தென்னிந்திய தீபகற்பத்தில் உள்ள அகணிய உயிரியாகும். இவை செங்குத்தான, பாறைக் குன்றுகளின் உச்சியில் வாழக்கூடியன. இவற்றின் வாழிடங்கள் கிரானைட் சுரங்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இந்த உயிரினத்தின் அழைப்புகள் வெண்புருவ கொண்ண்டாத்தியுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இவற்றின் நோற்றமும் வெண்புருவ கொண்டலாத்திபோல இருந்தாலும் இதை சிலர் வெண்புருவக் கொண்டலாத்தியாக நினைத்துக் குழப்பிக் கொள்வதுண்டு. இதன் தலை, தொண்டை, போன்றவற்றில் உள்ள மஞ்சள் நிறம் இவற்றை வேறுபடுத்துவதாக உள்ளன.
உயிரியல் வகைப்பாடு
மஞ்சள் தொண்டை சின்னானானது முதலில் தாமஸ் சி. ஜெர்டன் அவர்களால் பிரோகிபஸ் பேரினத்த்தில் வகைபடுத்தப்பட்டது (பைக்கோனொனாட்டசின் வேறு பெயர்). பின்னர் மறு வகையாக்கத்தின்போது இக்ஸோஸின் பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. இது மீண்டும் பைக்கோனொனாட்டஸ் பேரினத்திலேயே மீண்டும் வகைப்படுத்தப்பட்டது.
பரவல் மற்றும் வாழிடம்
இந்தப் பறவைகளின் வாழிடமானது பாறைகள் நிறைந்த மலைகளின் மேற்பகுதி ஆகும். பெரும்பாலும் தென்னிந்தியாவில் குறிப்பாக கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சில இடங்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் வாழிடங்களான இந்த மலைக் காடுகள் கிரானைட் சுரங்கங்கள், காட்டுத் தீ, மேய்ச்சல் பொன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. இதனால் இந்தப்பறவையானது முன்பு காணப்பட்ட பல இடங்களிலிலிருந்து அற்றுப்போய்விட்டது.
இவை காணப்படும் சில இடங்களாக அறியப்பட்டவை நந்தி மலை, ஹார்ஸ்லி மலைகள், செஞ்சி, ஏற்காடு வல்லிமலை (வேலூர்), ஜவ்வாது மலை பிலிகிரி ரங்கநாத மலை போன்றவை ஆகும். இந்த இனமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆனைமலையின் சில பகுதிகளில் காணப்படுவதாக அறியப்படுகிறது. இது வாழும் பகுதிகளின் வட எல்லையானது ஆந்திரத்தின் நல்லமலைக் குன்றுகள் எனப்படுகிறது ஆனால் இவை வாழும் பகுதியானது வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒடிசாவரை இருக்கலாம் என்ற ஐயம் உள்ளது.
நடத்தை மற்றும் சூழலியல்
இந்தப் பறவை கூச்சசுபாவமானதாகையால், புதர்களில்மறைந்து இருக்கக்கும். இதன் வெண்புருவ கொண்ண்டாத்தை ஒத்திருக்கும் குரலைக் கொண்டு இதை அறியலாம். இவை பூச்சிகள் மற்றும் உண்ணிச்செடி, காட்டுமிளகு, செம்புளிச்சான், மணித்தக்காளி, சந்தனம், ஆல் அத்தி, உள்ளிட்ட தாவரங்களின் பழங்களையும் உண்ணும். வெயில்கால மாலை நேரங்கள் மற்றும் வறண்ட பருவங்களில் இவை நீர் குடிக்கவும், குளிக்கவும் குளங்களுக்கு வரும்.
இவற்றின் இனப்பெருக்க காலம் சூன் முதல் ஆகத்துவரை ஆகும். இவை சிறிய மரமுட்களைக் கொண்டு பாறை இடுக்கில் கூடுகட்டும். கூட்டில் இரண்டு முட்டைகள் இட்டு 20 நாட்கள் அடைகாக்கின்றன. குஞ்சுகள் 13 நாட்களுக்குப் பிறகு பறக்கத் துவங்குகின்றன.