இருதலைப்புள், சிம்புள் அல்லது கண்டபேருண்டப் பறவை (கன்னடம் ಗಂಡಭೇರುಂಡ), (சமசுகிருதம் भेरुण्ड) என்பது இந்து தொன்மவியல் கூறும் ஒரு பறவை. இது இருதலைப்பாம்பு போல் இரண்டு பக்கம் தலை கொண்ட பறவை. அல்லது இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை. இது இரண்டு தலை கொண்ட குழந்தை போன்றது. இந்து தொன்மவியல்படி இது மகத்தான மந்திர சக்தியைக் கொண்டது என நம்பப்படுகிறது. இது கர்நாடக மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது வலிமையின் அடையாளமாகவும், அழிவு சக்திகளை எதிர்த்து போராடுவதாகவும் நம்பப்படுகிறது. இது பல இந்து கோவில்களில் சிற்பமாக செதுக்கப்பட்டு சிற்ப வடிவமாக உள்ளது.
விளக்கம்
பொதுவாக இந்தப் பறவைகள் தங்கள் அலகால் யானைகளின் துதிக்கையை பிடித்து தூக்கிக்கொண்டுள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளன, இது அவற்றின் மகத்தான வலிமையைக் காட்டுவதாக உள்ளன. மதுரையில் கிடைத்த ஒரு பழங்காலக் காசில் அது தன் அலகில் ஒரு பாம்பை வைத்திருப்பதாக உள்ளது. இரண்டு சித்தரிப்புகளிலும் இந்தப் பறவையானது மயிலை ஒத்த நீண்ட வால் இறகுகளைக் கொண்டதாக காட்டுகின்றன, அதே சமயத்தில் இரு வடிவங்களிலும் இரட்டைத் தலைக் கழுகு போன்ற உருவமாக காட்டுகின்றன. கர்நாடகத்தில் உள்ள பேலூர், சென்னகேசவர் கோவிலில், கண்டபேருண்டப் பறவை “அழிவின் சங்கிலி” காட்சியாக செதுக்கப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒரு மான் பெரிய மலைப் பாம்புக்கு இரையாகிறது, இதையொட்டி ஒரு யானை தூக்கி எறியப்படுகிறது. ஒரு சிங்கம் யானையை தாக்குகிறது, சிங்கமும் சரபத்தால் விழுங்கப்படுகிறது. இறுதியாக சரபத்தை கண்டபேருண்டப் பறவை முடிக்கிறது என உள்ளது.
தமிழ் இலக்கியங்களில்
சங்கநூல்களில் இரண்டு பாடல்கள் இந்தப் பறவையைக் குறிப்பிடுகின்றன.
தோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்னின் தலைகள் போன்றது என்கிறாள். கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான்.
இந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. சுமேரிய முத்திரையிலும் (கி.மு. 1350) அச்சுதராயர் தங்க நாணயத்திலும் (கி.பி. 1530) இந்தப் பறவையின் படம் இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்று உள்ளது.
‘இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் ‘இரண்டு பக்கம்’ என்னும் பொருளில் பயின்று வருகிறது.