மர வாத்து (Wood Duck or Carolina Duck (Aix sponsa)) அல்லது கரோலினா வாத்து என்பது தென் அமெரிக்காவில் உள்ள வண்ண மயமான, மிக அழகிய பறவைகளில் ஒன்றாகும்.
உடலமைப்பு
மர வாத்து தலையிலிருந்து வால் சிறகுகள் வரை சுமார் 18 அங்குலம் நீளமுடையது. ஆண் வாத்து பல வண்ண நிறங்களைத் தன் உடலில் கொண்டிருக்கும். கண்கள் சிவப்பு நிறமுடையதாகக் காணப்படும். கழுத்தில் வெண்மை நிற வளையம் ஒன்று இருக்கும். தலைப் பகுதி தனித்துவமான பச்சை நிறத்தில் இருக்கும். பெண் வாத்துகள் பழுப்பு நிறத்தில் புள்ளிகளுடன் காணப்படும்.
வாழ்க்கை
மர வாத்துகள் மற்ற வகை வாத்துகளைப் போல, வாழ்நாளின் பெரும்பகுதியை நீருள்ள ஆறுகளிலும், குளங்களிலும் கழிக்கின்றன. தங்குவதற்கும், முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்கும் உயரமான மரங்களையே தேர்ந்தெடுக்கிறது. தங்களை இரையாகக் கொள்ளும் மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவே இவ்வாறு உயரமான மரங்களில் கூடு கட்டுகின்றன. இவைகள் தரையிலிருந்து 20 முதல் 30 அடிக்கும் மேலேயுள்ள மரக்கிளைகளில் அல்லது மரப் பொந்துகளில் கூடு கட்டி முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கும். அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும், கனடாவின் தெற்குப் பகுதியிலும் மிகுதியாகக் காணப்படுகிறது.
இனப்பெருக்கம்
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை இவைகளின் இனப்பெருக்க காலம். பெண் வாத்துகள் அவைகள் எங்கு பிறந்து வளர்ந்தனவோ, அதே இடத்திலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. அவைகள் தங்களுக்குப் பிரியமான அழகிய பலவண்ண ஆண் துணையுடன் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு கூட்டி வருகின்றன. இவைகள் வழக்கமாக வருடம் ஒருமுறை இனப்பெருக்கம் செய்கின்றன. சில வேளைகளில் வருடம் இரண்டு முறை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதுமுண்டு. குஞ்சுகள் வளர்ந்து பெரியதாகிப் பிரிந்ததும், அவைகள் காத்திருந்து அடுத்த இனப் பெருக்கத்தைத் தொடருகின்றன.
உணவு
பழங்கள், கொட்டைகள்,சிறு பூச்சிகள், நீர்வாழ் சிறு உயிர்கள், புழுக்கள் ஆகியவை காட்டு வத்துகளின் உணவுகளாகும்.
கூடுகளும் பராமரிப்பும்
பெண் வாத்துகள் உயரமான மரக்கிளைகள், மரப்பொந்துகள் மற்றும் மனிதர்களால் செய்து மரக்கிளைகளில் வைக்கப்பட்ட, காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் அமைப்புடன் கூடிய பெட்டிகளிலும் கூடுகள் அமைத்து 7 முதல் 15 முட்டைகள் வரை இடும். அதன் பின் 28 முதல் 30 நாட்கள் அடைகாத்து குஞ்சுகள் பொரிக்கும். பெண்வாத்துகளே பொதுவாக அடைகாக்கும் வேலையைச் செய்கின்றன. உணவுக்காக தினமும் இரண்டு முறை இறங்கி வரும்போதும், அடைகாக்கும் போதும் ஆண் துணை வாத்துகள் பெண் வாத்துகளை உடன் சென்று கவனமாகப் பார்த்துக் கொள்ளும்.
இணை வாத்துகள் பொறித்த குஞ்சுகளை 56 முதல் 70 நாட்கள் வரை கூட்டிலேயே பாதுகாத்து வரும். சுமார் 60 நாட்களுக்கு மரக் கூட்டிலேயே வளர்க்கப்பட்ட குஞ்சுகள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்து அதன் உயரமான கூட்டிலிருந்து கீச்சிட்டு சப்தமெழுப்பி தரையிலோ, கீழேயுள்ள நீர்ப்பரப்பிலோ படபடவென்று தாவிப் பறந்து குதித்து விளையாடும்.
இளம் குஞ்சுகள் தாய்ப் பறவையுடன் சேர்ந்து தரையிலும், நீரிலும் சிறு பூச்சிகளையும், புழுக்களையும் உணவாகக் கொள்ளும். இச்சமயத்தில் ஆமைகள், முதலைகள், பாம்புகள், பெரும் தவளைகள் மற்றும் கழுகு போன்ற பறவைகளுக்கு் 50 விழுக்காடு குஞ்சுகள் இரையாக வாய்ப்புண்டு. குஞ்சுகள் தானாகப் பறந்து இரைகளிடமிருந்து தப்பிக்கும் வரை சுமார் 8 முதல் 10 வாரங்கள் தாய்ப் பறவை கவனமாகப் பார்த்துக் கொள்ளும்.