அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:
நாகேஸ்வரர்
உற்சவர்:
சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார்:
காமாட்சி
தல விருட்சம்:
செண்பக மரம்
தீர்த்தம்:
சூரிய புஷ்கரிணி
ஆகமம்/பூஜை :
காரணாகமம்
ஊர்:
வடநாகேஸ்வரம்
மாவட்டம்:
காஞ்சிபுரம்
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், வைகாசியில் சேக்கிழார் குருபூஜை, புரட்டாசியில் நிறைமணிக்காட்சி, தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம், மாசிமகம்.
தல சிறப்பு:
சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வர லிங்கம் பின்னப்பட்டது. எனவே, பக்தர்கள் அந்த லிங்கத்தை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மூலஸ்தானத்தில் பழைய லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்பின்பு, தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கத்தை எடுத்து, மீண்டும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். புதிதாக பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, சன்னதிக்கு பின்புறம் வைத்துள்ளனர். இந்த சிவன், அருணாச்சலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். பக்தர்கள் இவரையும் மூலவராகவே பாவித்து வழிபடுகின்றனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில், வடநாகேஸ்வரம், குன்றத்தூர்- 600 069. காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 44 – 2478 0436, 93828 89430.
பொது தகவல்:
இது சேக்கிழார் கட்டிய கோயில். இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது.
பிரகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர், நாகத்தின் வடிவில் சத்யநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் இருக்கின்றனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் இருக்கிறது. காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கற்பக விநாயகர், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர்.
பிரார்த்தனை
நாக தோஷ நிவர்த்தி, ராகுப்பெயர்ச்சியால் தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமியை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
தலபெருமை:
நாக தோஷம் நீக்கும் சிவன்:
நாகேஸ்வரர், இத்தலத்தில் ராகுவின் அம்சமாக காட்சி தருகிறார். தினமும் இவருக்கு காலை 6.30, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து, உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள் (கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருவர்). இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
அம்பாள் காமாட்சி தெற்கு நோக்கி, எதிரில் சிம்ம வாகனத்துடன் தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். தை வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி இக்கோயிலில், 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இவ்விழாவின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். அப்போது சுவாமிக்கு முன்புறம் அவரை பார்த்தபடி ஒரு சப்பரத்தில் நால்வர் மற்றும் சேக்கிழார் உலா செல்வர். சித்ரா பவுர்ணமியன்று சிவன், அம்பாள் திருமணம் நடக்கிறது. விழாவில் ஒருநாள் சுவாமி, நாக வாகனத்தில் உலா செல்வார்.
சேக்கிழாரின் சிவ தரிசனம்:
கோயில் பிரகாரத்தில் சேக்கிழாருக்கு, தனிச்சன்னதி இருக்கிறது. சிவனை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்றிருக்கும் இவர், வலது கையில் சின்முத்திரை காட்டி, இடக்கையில் ஏடு வைத்திருக்கிறார். அனைத்து பூசம் நட்சத்திரத்தன்றும் இவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி 10 நாட்கள் குருபூஜை விழா கொண்டாடுகின்றனர். குருபூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி இங்கிருந்து தேரடிக்குச் செல்வார். அப்போது பொதுமக்கள் சிவன் சார்பில், சேக்கிழாரை கோயிலுக்குள் அழைத்து வருவர். அதன்பின்பு, சேக்கிழார் மூலஸ்தானத்திற்குள் சென்று நாகேஸ்வரரை தரிசிக்கும் வைபவம் நடக்கும். அன்றிரவில் சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி உலா சென்று, மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். அன்று இரவு முழுதும் கோயில் திறந்தே இருக்கும். இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் சேக்கிழார் பிறந்த தலத்தில், அவருக்கு தனிக்கோயில் உள்ளது. அங்கும் சேக்கிழார் குருபூஜை விழா 11 நாட்கள் நடக்கும். அவ்விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவனை தரிசிப்பார்.
தல வரலாறு:
சோழமன்னன் அனபாயன் இப்பகுதியை ஆண்டபோது, அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழிராமதேவர், குலத்தின் பெயரால் “சேக்கிழார்’ என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவரது சிறப்பான பணிகளைக் கண்டு மகிழ்ந்தவன், “உத்தமசோழபல்லவர்’ என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறை, “பெரியபுராணம்’ என்னும் தொகுப்பாக வெளியிட்டார்.
ஒருசமயம் சேக்கிழார், கும்பகோணம் அருகிலுள்ள ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவனை தரிசித்தார். அத்தலத்து சிவன் மீது அதீத பக்தி கொண்ட அவர், தினமும் நாகேஸ்வரரின் தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினார். அதேசமயம் அடிக்கடி திருநாகேஸ்வரம் செல்ல முடியாதென்பதால், நாகேஸ்வரருக்கு தனது ஊரில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, இங்கு ஒரு கோயில் எழுப்பினார். சிவனுக்கு, “நாகேஸ்வரர்’ என்று பெயர் சூட்டி, தினமும் வழிபட்டார். தலமும், “வடநாகேஸ்வரம்’ என்று அழைக்கப்பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வர லிங்கம் பின்னப்பட்டது. எனவே, பக்தர்கள் அந்த லிங்கத்தை இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் போட்டுவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தை மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். அன்றிரவில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மூலஸ்தானத்தில் பழைய லிங்கத்தையே பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அதன்பின்பு, தீர்த்தத்தில் போடப்பட்ட லிங்கத்தை எடுத்து, மீண்டும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தனர். புதிதாக பிரதிஷ்டை செய்த லிங்கத்தை, சன்னதிக்கு பின்புறம் வைத்துள்ளனர். இந்த சிவன், அருணாச்சலேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். பக்தர்கள் இவரையும் மூலவராகவே பாவித்து வழிபடுகின்றனர்.