அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:
ஐராவதேஸ்வரர், அழகேஸ்வரர்
அம்மன்/தாயார்:
காமாட்சி, அகிலாண்டேஸ்வரி
ஊர்:
ஓசூர், அத்திமுகம்
மாவட்டம்:
கிருஷ்ணகிரி
மாநிலம்:
தமிழ்நாடு
திருவிழா:
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை
தல சிறப்பு:
ஒரே கோயிலில் இரண்டு மூலர்வர்கள் உள்ளனர். சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது. தைமாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது விழுகிறது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர்-635109, கிருஷ்ணகிரி மாவட்டம்.
போன்:
–
பொது தகவல்:
வெளிபிரகாரத்தில் அட்சரமாலையுடன் கணபதி வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை:
ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹாரம் செய்து ஞானத்தை வழங்குகிறார். எனவே தான் இவர் “சம்ஹார தெட்சிணாமூர்த்தி’ எனப்படுகிறார்.
இங்கு இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அருள்பாலிக்கிறார்கள்.
தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகி பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை தெரிந்து கொள்ளலாம்.
நந்தி விலகிய தலம்:
இது ஒரு சூரிய பூஜைக்கோயில். தைமாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது பட்டு பூஜை நடக்கிறது. அப்போது சிவனின் முன்பாக எந்த இடையூறும் இல்லாமல் இருக்க நந்தி விலகி சூரிய பூஜை சிறப்பாக நடக்க வழி செய்துள்ளது. சூரியபூஜைக்காக நந்தியே விலகியிருப்பதால் நவக்கிரகங்களும் அமைதியாக அமர்ந்த நிலையில் உள்ளன. இது இக்கோயிலின் ஒரு சிறப்பான அம்சமாகும்.
சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் நாகேஸ்வரர் சிலையில் பாம்பு உருவம் இருக்கும். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை உருவத்தைக் கொண்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.
தல வரலாறு:
விருத்தாசூரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். இதனால் வருத்தமுற்ற தேவர்கள் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது ஆஸ்தான வாகனமான ஐராவதத்துடன் சென்று விருத்தாசூரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இதனால் இந்திரனுக்கும் அவனது யானை ஐராவதத்திற்கும் பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொண்டது.
பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகஸ்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென அசரீரி கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் அகஸ்திய நதி ஓடும் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர்.
ஹஸ்தி என்றால் யானை. யானை இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு “ஹஸ்திமுகம்’ என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி “அத்திமுகம்’ என அழைக்கப்படுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
ஒரே கோயிலில் இரண்டு மூலர்வர்கள் உள்ளனர். சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது. தைமாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது விழுகிறது. ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.