நேமம் அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் – Jayamkonda soleeswarar Temple

அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில்


மூலவர்:

ஜெயங்கொண்ட சோளீஸ்வரர்


அம்மன்/தாயார்:

சவுந்தர நாயகி


தீர்த்தம்:

சோழதீர்த்தம்


ஊர்:

நேமம்


மாவட்டம்:

புதுக்கோட்டை


மாநிலம்:

தமிழ்நாடு


திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி


தல சிறப்பு:

இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.


திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம், காரைக்குடி, புதுக்கோட்டை.


போன்:

+91 4577- 264 190, 94428- 14475


பொது தகவல்:

கயிலாயத்திலிருந்து பொதிகை சென்று கொண்டிருந்த அகத்தியர் இத்தலப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றுள்ளார். இக்கோயில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். மீனாட்சி திருக்கல்யாண கோலம், காலசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவதாண்டவம், மார்கண்டேயர் சிற்பங்கள் அழகுற செதுக்கப் பட்டுள்ளன.


பிரார்த்தனை


தொழிலில் முன்னேற்றம் ஏற்பட, கல்வியில் சிறந்து விளங்க, திருமணம் கைகூட இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபட்டுச் செல்கின்றனர்.


நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:

மாலை சாத்தி வழிபாடு:

சிவன் மன்மதனை வெற்றி கொண்ட ஸ்தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடந்தும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்யலாம். சுவாமி, அம்பாள், விநாயகர், நந்தி, கல்யாணகந்தர், உற்சவ மூர்த்தி, வைரவர் ஆகிய ஏழு சுவாமிகளுக்கும் மாலை சாத்த வேண்டும். பலன் கிடைத்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.


மேற்கு நோக்கிய வைரவர்:

கோயில் முன்பு 66 அடி உயரத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வைரவர் (பைரவர்) இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அத்துடன் ஜெயங்கொண்ட விநாயகர், வில்லேந்திய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகளும் உள்ளன. கோயில் முன்புள்ள சோழதீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபடுவதால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது.


தல வரலாறு:

அசுரர்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள, தேவர்கள் சிவபெருமானை தரிசிக்க வந்தனர். யோக நிலையில் இருந்த அவரை எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர் மீது மலர்க்கணைகளை தொடுக்கும் படி மன்மதனை வேண்டினர். இட்ட பணியை செய்யாவிட்டால் தன்னை சபித்துவிடுவர் என்று அஞ்சிய மன்மதனும் சிவபெருமான் மீது மலர் அம்பை தொடுத்தான். கோபத்துடன் நெற்றிக்கண்ணை திறந்த சிவன், மன்மதனை சாம்பலாக்கினார். காமத்திற்கு அதிபதியான மன்மதனை வெற்றி கொண்டதால், இங்குள்ள சுவாமிக்கு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. இவர் அம்பாள் சவுந்தரநாயகியம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பகுதியை ஜெயங்கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்டபுரம், குலசேகரபுரம், மதுநதிபுரம் என்பர். பாண்டியர் ஆட்சியில் காருண்யபாண்டியன் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளான். தற்போது நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது. நகரத்தாரின் ஒன்பது முக்கிய கோயில்களில் இதுவும் சிறப்பானதாகும்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:

இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *