அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்
மூலவர்:
மகாதேவர்
ஊர்:
கரமனை தளியல்
மாவட்டம்:
திருவனந்தபுரம்
மாநிலம்:
கேரளா
திருவிழா:
தை மாதம் பிரம்மோற்ஸவம் 8 நாட்கள், திருவாதிரை, சிவராத்திரி, கார்த்திகையில் 41 நாள் மண்டல பூஜை.
தல சிறப்பு:
சதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். அம்மன் இல்லாத கோயில். இங்குள்ள நந்தி நகரும் அமைப்பில் அமைந்துள்ளதும் இத்தலத்தின் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் கரமனை தளியல், திருவனந்தபுரம் கேரள மாநிலம்.
போன்:
+91 471- 245 1837
பொது தகவல்:
சதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். கருவறை விமான கோபுரம் தமிழக சிற்பக்கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. கரமனை ஆறு அருகில் ஓடுவதால் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கோயிலில் தேவபிரஸன்னம் பார்த்த போது சக்தி வாய்ந்த கிருஷ்ணரும், அனுமனும் உள்பிரகார தூணில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு பூஜை நடக்கிறது. சாஸ்தா, விநாயகர், நாகர் சந்நிதிகள் உள்ளன.
பிரார்த்தனை
திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும், காய்ச்சல் குணமாகவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்குள்ள நந்திக்கு மணிச்சரம் கட்டி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஜலதாரை வழிபாடு:
சுவாமியின் மேல் தாரா பாத்திரம் கட்டப்பட்டு உள்ளது. இதில் தீர்த்தம், பால் அல்லது நெய் நிரப்பப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருள் சொட்டு சொட்டாக சுவாமி மீது விழுகிறது, இந்த அபிஷேகத்தால் தங்கள் மனக்குறை தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர். திருமணத்தடை விலகவும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கல்வியில் மேம்படுவதற்கும், 108 கலசம் தீர்த்தம் அபிஷேகம் செய்கின்றனர்.
அம்மன் இல்லாத கோயில்:
இந்தக் கோயிலில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. இவ்வாறான கோயில்களில் இருக்கும் சிவனை ஆதிசிவன் என்பர். சாக்தம் எனப்படும் அம்பாள் வழிபாடு துவங்குவதற்கு முன்பே, இங்குள்ள சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். கர்ப்பகிரகத்தை சுற்றி வரும் பழக்கமும் இல்லை. ஏனெனில், சுவாமியின் ஜடாமுடி பின்பக்க பிரகாரத்தில் பரந்து விரிந்துகிடக்கும் என்பதும், அதை மிதிக்கக்கூடாது என்பதும் ஐதீகம். சாஸ்தா, விநாயகர், நாகர் சந்நிதிகள் உள்ளன.
நகரும் நந்தி:
இந்த கோயிலில் உள்ள நந்தி சுவாமிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருந்தார். இது மெல்ல மெல்ல நகர்ந்து திசை மாறி சென்று கொண்டிருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். கருவறையை ஒட்டிய மேடைக்கும், நந்திக்கும் இடையே ஒரு காலத்தில் பெரிய இடைவெளி இருந்துள்ளது. தற்போது, மேடையை நோக்கி நகர்ந்து நெருக்கமாக வந்துவிட்டது. இன்னும் சிறிது நாட்களில் நந்தி மேடையோடு முட்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார் கோயில் அர்ச்சகர்.
நந்திக்கு மணிச்சரம்:
கால்நடைகளுக்கு நோய் வந்தால் இங்குள்ள நந்திக்கு மணிச்சரம் கட்டி, பயறு மற்றும் காய்கறி, பழங்கள் இவற்றால் நைவேத்தியம் செய்கின்றனர். இவ்வாறு செய்தால் நோய் குணம் அடைவதுடன், விவசாயம் செழிப்படைவதாக நம்பிக்கையுள்ளது. இப்பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் நந்தியை அடித்து விளையாடியுள்ளான். அன்று இரவு நந்தி கனவில் வந்து சிறுவனைப் பயமுறுத்தியது. பயந்து போன அவனுக்கு விடாமல் காய்ச்சல் அடித்தது. தேவபிரஸ்னம் பார்த்ததில் சிறுவன் நந்தியை துன்புறுத்தியது தெரியவந்தது. பரிகாரமாக, அதன் கழுத்தில் மணிச்சரம் கட்டியதும், காய்ச்சல் குணமாகி விட்டது. சிறுவனைத் தண்டிக்க வேண்டுமென்பது நந்தியின் நோக்கமல்ல. நான் உயிரோட்டமாக உள்ளேன் என்பதை நிரூபிக்கவே, நந்தி இவ்வாறு செய்தார்.
தல வரலாறு:
மலைநாட்டில் உள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இங்கு ஆட்சி செய்த கர மகாராஜா, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இப்பகுதியில் இருந்த காளை மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். ஒருநாள் அது, தன் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் தள்ளிவந்து கோயில் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. இரவாகி விட்டதைக் கவனிக்காத காளையால், இருளில் தன் இருப்பிடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக, இந்தக் கோயிலுக்குள் நுழைந்து, கருவறையைப் பார்த்தவாறு நந்தி அமர்ந்துவிட்டது. இப்போதுள்ள நந்தி, அந்தக் காளையாகவே இருக்கும் என நம்பி பக்தர்கள் வழிபடுகின்றனர். கர மகாராஜாவை தொடர்ந்து திருவிதாங்கூர் மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். இது 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவாலயம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
சதுர பீடத்தில் லிங்கவடிவில் மகாதேவர் எழுந்தருளியிருக்கிறார். அம்மன் இல்லாத கோயில். இங்குள்ள நந்தி நகரும் அமைப்பில் அமைந்துள்ளதும் இத்தலத்தின் சிறப்பு.