அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) திருக்கோயில்
மூலவர்:
மகாதேவர், இரட்டையப்பன்
அம்மன்/தாயார்:
பார்வதி
தல விருட்சம்:
ஆல மரம்
தீர்த்தம்:
தொடுகுளம்
ஊர்:
பெருவனம்
மாவட்டம்:
திருச்சூர்
மாநிலம்:
கேரளா
திருவிழா:
மாசி உத்திர நட்சத்திரத்தில் கொடியேற்றி பங்குனி உத்திர நட்சத்திரம் வரை பிரம்மோற்ஸவம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை
தல சிறப்பு:
ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை “இரட்யைப்பன் கோயில்’ என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல்10.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி:
செயல் அலுவலர் அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில் பெருவனம் தேவஸ்வம்- சேர்பு போஸ்ட், பெருவனம், திருச்சூர் – 680 561. கேரளா.
போன்:
+91- 98478 49283
பொது தகவல்:
இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இரட்டையப்பன் கோயிலை சுற்றி 24 கோயில்கள் இருக்கின்றன. அவை:
திருப்பறையார் ராமர், சேர்ப்பு பகவதி(பூமாதேவி), ஊரகத்தம்மா திருவடி (லட்சுமி), ஆறாட்டுப்புழா சாஸ்தா, சாத்தன்குடம் சாஸ்தா, தொட்டிப்பால் பகவதி, அந்திக்காடு பகவதி, சுரக்கோடு பகவதி, நெட்டிசேரி சாஸ்தா, மாட்டில் சாஸ்தா, அயக்குன்னு பகவதி, கடலாசேரி பிசாரிக்கல் பகவதி, கோடனூர் சாஸ்தா, நாங்குளம் சாஸ்தா, எடக்குன்னி பகவதி, சக்கங்குளங்கரை சாஸ்தா, தைக்காட்டுசேரி பகவதி, சிட்டிசாத்துகுடம் சாஸ்தா, மேடங்குளங்கரை சாஸ்தா, கல்லேறி சாஸ்தா, கொடுகரை புனிலார்காவு பகவதி, கடுப்புசேரி பகவதி, சாலக்குடி பிசாரிக்கல் பகவதி, திருவல்லகாவு சாஸ்தா ஆகியவை ஆகும்.
இந்த 24 கோயில்களிலும் திருவிழா துவங்கும் முன், அந்தந்த கோயில்களின் நிர்வாகிகள், பெருவனம் கோயிலுக்கு வந்து சிவனிடம் அனுமதி கேட்டு பூஜை செய்த பின்னரே விழாவை துவக்குவது சிறப்பு.
அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்கு பின்புறம் கிழக்கு நோக்கி பார்வதி அருள்பாலிக்கிறாள். தெற்கு நோக்கிதெட்சிணாமூர்த்தியும், அருகே கணபதியும் உள்ளனர். கோயில் சுற்றுப்பகுதியில் கோசால கிருஷ்ணன் தனி சன்னதியில் அருளுகிறார்.
கோயிலின் வடக்கே அகமலா சாஸ்தா, தெற்கே வழுத்துகாவு சாஸ்தா, கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா என நான்கு திசைகளிலும் நான்கு சாஸ்தாக்கள் காவல் செய்கின்றனர்.
பிரார்த்தனை
பிரிந்துள்ள தம்பதியினர் ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடையவும், திருமண தடை விலகவும், ஆயுள் விருத்திக்காகவும் இங்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது
நேர்த்திக்கடன்:
தொழில், வியாபாரம், புதிய திட்டங்கள் துவங்குதல், பணி ஆகியவற்றின் வெற்றிக்காவும், படிப்பில் சிறந்து விளங்கவும் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 60, 70, 80 வயது நிறைவடைந்த தம்பதியினர் இத்தலத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்கிறார்கள்
தலபெருமை:
ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை “இரட்யைப்பன் கோயில்’ என அழைக்கிறார்கள். இரண்டு லிங்கங்களின் எதிரிலும் நந்தி, பலிபீடம் உள்ளது. கோயிலின் பின்புறம் தொடுகுளம் உள்ளது.
பூரு மகரிஷி பிரதிஷ்டை செய்த இந்த லிங்கம் மகாதேவர் என்ற திருநாமத்துடன் அமைந்துள்ளது. அருகில் மற்றொரு சன்னதியில் மகரிஷிக்கு காட்சி தந்த அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் உள்ளது. லிங்கத்திற்குள் பார்வதி இருப்பது இங்கு மட்டும் தான். பார்வதி வடிவை சிறுலிங்கத்திற்குள் இருப்பது போல செதுக்கி, பெரிய லிங்கத்துடன் ஐக்கியப்படுத்தி உள்ளனர். சிவராத்திரியை ஒட்டி இந்த அபூர்வ லிங்கத்தையும், உயரமான இடத்திலுள்ள லிங்கத்தையும் தரிசிக்க வேண்டுமானால் இங்கு தான் செல்ல வேண்டும்.
இத்தலத்தில் 1426 வருடங்களாக பூரம் திருவிழா நடந்து வருகிறது. புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கூட 200 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது
தல வரலாறு:
பூரு மகரிஷி வனமாக இருந்த இப்பகுதியில் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி சமேதராக அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து, லிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்குரிய தீர்த்தத்தை தனது கையாலேயே உருவாக்கினார் மகரிஷி. விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். எனவே அது “தொடுகுளம்’ எனப்பட்டது. இந்த குளத்தில் நீர் வற்றும் போது மகரிஷி போட்ட மூன்று கோடுகளை இப்போதும் காணலாம்.
ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து லிங்கத்தை எடுத்த போது லிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்து வந்தார். இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும்.
பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் “பூரு வனம்’ என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் “பெருவனம்’ ஆனது
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
ஒரே கோயிலில் இரண்டு சிவலிங்கம் இருப்பதால் இக்கோயிலை “இரட்யைப்பன் கோயில்’ என அழைக்கிறார்கள். அதேபோல் ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கம் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இங்கு சிவன் மேற்கு பார்த்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.